தமிழ்நாடு அரசின் புதிய பட்ஜெட், ஒன்றிய அரசின் நிதி வஞ்சகம் மற்றும் கல்விக்கூடங்களை அரசியல் களமாக மாற்றிவரும் அமைச்சர்களின் அராஜகப் போக்கு ஆகியவை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் அனல் பறக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நிதி நெருக்கடியும் ஒன்றிய அரசின் வஞ்சகமும்!
மாநில அரசுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதற்கு 2017-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையே முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டிய கனகராஜ், உற்பத்தி மாநிலங்களுக்கான இழப்பீட்டைத் தொடர்ந்து நீட்டிக்க மறுக்கும் பாஜக அரசின் போரைக் கண்டித்தார். ஜிஎஸ்டி பங்குகளை உரிய காலத்தில் தராமல் தடுப்பதும், 75 சதவீத நிதியை மாநில அரசைக் கட்டாயமாகப் போடச் சொல்லி ‘டைடு ஃபண்ட்ஸ்’ (Tied Funds) மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் கைகளைக் கட்டுவதும் மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கும் செயல் என்றார். மேலும், ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ போன்ற திட்டங்களில் ஒன்றிய அரசு தரும் சொற்பத் தொகையைத் தாண்டி, பல லட்சம் ரூபாயைத் தமிழக அரசே சுயமாகச் செலவிட வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருப்பதியில் வேளாண் பட்ஜெட் நாடகமா?
விவசாயிகளுக்கான வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு அறிமுகப்படுத்திய விவகாரத்தைக் கடுமையாகச் சாடிய அவர், “தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நம்புபவர்கள் தலைமைச் செயலகத்திலேயே வைத்துச் சாமி கும்பிடலாமே! இது எதற்காகச் செய்யப்படும் விளம்பரம்?” என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர்கள் தாங்கள் எடுத்த ரகசியக் காப்புப் பிரமாணத்திற்கு முரணாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்றார்.
பள்ளி வளாகங்களைச் சீரழிக்கும் அமைச்சர்களின் அராஜகம்!
கல்விக் கூடங்களை அரசியல் மேடைகளாக மாற்றிவரும் அமைச்சர்களின் செயல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த கனகராஜ், கல்வித்துறை மற்றும் அரசின் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக விமர்சித்தார், அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் அமைச்சர்கள் மாணவர்களை வைத்து அரசியல் கட்சிக் கோஷங்களை எழுப்புவதும், கொடி கட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. மாணவி ஒருவரின் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு ‘உங்க அப்பா கூலி’ என்று அவமதிக்கும் வகையில் ஆசிரியை மற்றும் மாணவி முன்னிலையில் அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் எடுத்த செயல் எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாத, தண்டனைக்குரிய குற்றம் என்றார்.
கல்வி அமைச்சர் எவ்வளவோ சுற்றறிக்கைகளை வெளியிட்டும், அமைச்சர்களே அவற்றைத் தொடர்ச்சியாக மீறுவது தமிழ்நாட்டின் கல்விச் சூழலின் ஒட்டுமொத்தச் சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்த அவர், அரசு உடனடியாக இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; இல்லையெனில் பெற்றோர்களும் பொதுமக்களும் களத்தில் இறங்கித் தட்டி கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
வெளிப்படைத்தன்மையற்ற நியமனங்கள்!
தவெக மற்றும் அதன் ஐடி விங்கில் பணியாற்றியவர்களை அரசுப் பதவிகளில் எப்படிக் கொல்லைப்புறமாக நுழைக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முறையான அறிவிப்புகளோ வெளிப்படைத்தன்மையோ இன்றி மூடுமந்திரமாக நடக்கும் இந்த நியமனங்கள் ஜனநாயகத்திற்கு நேரடி எதிரானது என்று சாடினார்.
