நாமக்கலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தன்னுடைய உரையின்போது பல இடங்களில் பேச தடுமாறினார். உரையின் இறுதியில் அதற்கான விளக்கத்தை கூறி தொண்டர்களிடம் சாரி கேட்டுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்றைக்கு நாமக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பல இடங்களில் தடுமாறி தடுமாறி பேசினார். தன்னுடைய பேச்சின்போது சென்னை மாகாணம் என்பதற்கு பதிலாக மகாணம் என்று கூறினார். மருத்துவ வசதி அமைக்க வேண்டும் என்பதற்கு அமைக்கிக்கணும் என்று சொன்னார். அதேபோல், பிற்படுத்தப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற வார்த்தையை சொல்கிறபோது பிற்படுத்தப்பப்பட்ட என்று தெரிவித்தார். மற்றொரு இடத்தில் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்பதற்கு பதிலாக செல்வோம் என்று தவறுதலாக கூறினார்.
இதேபோல், கொள்முதல் நிலையங்கள் என்பதற்கு பதிலாக திலையங்கள் என்றும், ஒத்தையடி பாதை போடப்படும் என்பதற்கு மாற்றாக போதப்படும் என்றும் தடுமாறினார். மற்றொரு இடத்தில் TVk மறுபடியும் ஆட்சியமைக்கணுமா? என்று தவறுதலாக பேசிய விஜய் பின்னர் சுதாரித்துக்கொண்டு சாரி, இப்போது ஆட்சியமைக்கணுமா? என்றும் வினவினார்.
நாமக்கல் மாவட்டத்தில் தனது உரையை நிறைவு செய்த பின்னர், பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், “சாரி நான் பேசுவதும் அங்கு ஒலிக்கும் சத்தமும் முன்பின் சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த ரிதமை பிடிக்க சற்று நேரமாகி விட்டது. நன்றி”, என்று கூறி கரூக்கு புறப்பட்டு சென்றார்.