நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் மாநாட்டுத் திடலுக்கு படையெடுத்துள்ளனர். மாடநாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான ஆட்கள் பங்கேற்றிருப்பதால், உணவு, குடிநீர் உள்ளிட்டவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இரவே பலர் வந்து மாநாடு நடைபெறும் பகுதியில் தங்கியதாலும், காலை முதலே லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டுத் திடலில் காத்திருப்பதால் 300 டேங்கிகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மறுபுறம் மழை வந்து மாநாட்டை சொதப்பிவிடக்கூடாது என்று பலரும் வேண்டிக்கொண்டிருந்த நிலையில், வெயில் கொளுத்தி வாட்டி வதைத்து வருகிறது. 75,000 இருக்கைகள் நிரம்பி அதற்கு மேலும் மக்கள் மாநாடு திடலைச் சுற்றி காத்துக்கிடக்கின்றனர். இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளதால் விக்கிரவாண்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, 5 கி.மீ தொலைவிற்கு முற்றிலுமாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மதிய உணவின்றி தவித்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் தூக்கி வீசப்பட்டன. தண்ணீருக்காக மக்கள் முன்டியடித்துக்கொண்டு அலைமோதிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தொண்டர்களுக்காக பிஸ்கேட் மற்றும் குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்ட வண்ணமே உள்ளன. இருப்பினும் நாற்காலிகளை தலையில் சுமந்தபடியும், மாநாடுக்காக பொடப்பட்டிருந்த கொடிகளை கிழித்தும் வெயிலுக்காக தலைக்கு மேல் பிடித்துக்கொண்டும் மக்கள் காத்துகிடக்கின்றனர். வெயில் காரணமாகவும், தொண்டர்கள் காத்துக்கிடப்பதாலும் 4 மணிக்கு மேல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட மாநாடு 3 மணிக்கே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தவெக தலைவர் விஜய் மாநாடு திடலுக்கு வர உள்ளார்.