கல்வி ஒன்றே அழியாத சொத்து என்கிற வகையில் மற்றோருக்கு உதாரணமாக திகழ்ந்துள்ள சகோதரி ஸ்ரீபதியின் கனவுகள் வெல்லட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்வழி கல்வி கற்று, அயராத உழைப்பினாலும் – கடும் முயற்சியாலும் உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை – புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பெண்ணான சகோதரி ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள்.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை என்ற நம் திராவிட மாடல் அரசின் அரசாணையின் மூலமாக சகோதரி ஸ்ரீபதி உரிமையியல் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குறிப்பாக, குழந்தைப் பேறுக்குப் பின் அடுத்த இரண்டே தினங்களில் தேர்வு என்ற கடினமான சூழலிலும், உயிரைப் பணயம் வைத்து தேர்வுக்காக நெடுந்தூரம் பயணித்த அவரது லட்சிய உறுதி பாராட்டுக்குரியது. கல்வி ஒன்றே அழியாத சொத்து என்கிற வகையில் மற்றோருக்கு உதாரணமாக திகழ்ந்துள்ள சகோதரி ஸ்ரீபதியின் கனவுகள் வெல்லட்டும் என குறிப்பிட்டுள்ளார்.