Homeசெய்திகள்தமிழ்நாடுகிறிஸ்துவ பெண்ணை மணந்ததால் நானும் கிறிஸ்தவன் - உதயநிதி ஸ்டாலின்

கிறிஸ்துவ பெண்ணை மணந்ததால் நானும் கிறிஸ்தவன் – உதயநிதி ஸ்டாலின்

-

ஆட்சியிலும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி எப்போதும் தொடரும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சென்னை மண்ணடி, டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2000 பேருக்கு புத்தாடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு வி க நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தென்னிந்திய பேராயர்களின் தலைவர் அருட்தந்தை ஜான் ஸ்டீஃபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு உரையின்போது, அல்லேலுயா என கூறி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் பேசிய உதயநிதி, “ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலுயா என்று கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து கூறுவது தான், திராவிட மாடல் ஆட்சி என்றார். இதுதான் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், பேராசிரியர் கற்றுக் கொடுத்தது என அவர் தெரிவித்தார். கிறிஸ்துவ கல்வி நிலையங்களான டான்பாஸ்கோ பள்ளியலும் லயோலா கல்லூரியிலும் பயின்று, கிறிஸ்துவ பெண்ணை மணந்ததால், தம்மை ஒரு கிறிஸ்துவன் என கூறி பெருமை அடைவதாக குறிப்பிட்ட உதயநிதி, இதையெல்லாம் பார்க்கும் பொழுது சங்கிகளுக்கு எரியும் என்றார்.

தமது சேப்பாக்கம் தொகுதியை விட துறைமுகம் தொகுதிக்கு அதிக முறை வந்துள்ள தம்மை இஸ்லாமியராகவும் கருதிக் கொள்ளலாம் என அவர் கூறினார். மாண்டஸ் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என குறிப்பிட்ட உதய், வரும் காலங்களில் எங்குமே மழைநீர் தேங்காது என உறுதி அளித்தார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் எனும் பெயரை திமுக தலைவர் பெற்றாலும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக பெயர் பெற செய்வதே முக்கியம் என்று உதயநிதி கூறினார். அதன்படி ஒரு மிகப்பெரிய நாளேட்டில் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் முதல் மாநிலம் தமிழகம் என வெளியிடப்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். ஆட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை மட்டுமல்லாமல், மக்கள் பணி எப்போதும் தொடரும் என உதயநிதி ஸ்டாலின் உரையின் போது உறுதியளித்தார்.

MUST READ