மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இன்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் வழக்கமான சூழ்நிலையே நிலவுகின்றது. ஆனால் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில், அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னையில் பேருந்து சேவைகளில் பாதிப்பு இருக்காது என கழகம் தெரிவித்துள்ள நிலையில், விளம்பாக்கம், தியாகராயா், தாம்பரம், போன்ற இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்குகின்றன. இதே போல் திருப்பூா் மண்டலத்துக்குட்பட்ட 540 பேருந்துகளும் அந்தந்த பணிமனையிலிருந்து வழக்கம் போல் புறப்பட்டன. கடலூரிலும் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கின.குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் களியாக்கவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல் கேரளாவிலிருந்து வந்த பேருந்துகள் அனைத்தும் நாகா் கோவில் வடசேரியில் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவிற்கு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வழக்கமாக திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாயினா். மறு உத்தரவு வரும் வரை தமிழ் நாடு எல்லையான களியாக்கவிளை வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும். குமரி மாவட்டத்தின் உள்பகுதிகளுக்கும், தமிழ் நாட்டின் பிறபகுதிகளுக்கும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.
மேற்கு வங்கத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. அரசுப்பேருந்துகள் காவல் துறை பாதுகாப்புடன் இயங்கினாலும் ஹெல்மெட் அணிந்து தான் ஓட்டுநா்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனா்.
மேலும், கொல்கத்தாவில் ஜாதவ்பூாில் இடதுசாரி தொழிற்சங்கத்தினா் பிரம்மாண்ட எதிர்ப்பு நடைபயணத்தில் ஈடுபட்டனா். தொழிலாளா்களின் உரிமைகளை பலவீனப்படுத்தும் பொருளாதார சீா்திருத்தங்களை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் சாலைகளில் டயா்களை எாித்து போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினா். அவா்களை காவல்துறையினா் அப்புறப்படுத்தியதோடு, நெருப்பினையும் அணைத்தனா். ஜாதவ்பூா் ரயில் நிலையத்தில் நுழைந்த ஏராளமான தொழிற்சங்க உறுப்பினா்கள் தண்டவாளத்தை மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.