தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக நாளை செப்டம்பர் 10-ம் தேதி லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் போது துபாய் வழியாக லண்டன் செல்லும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதே இந்த வெளிநாட்டு பயணத்தின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. லண்டனில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை முதல்வர் விஜய் சந்தித்து, தமிழகத்தின் தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்த நடவடிக்கைகளையும் முதல்வர் நேரடியாக கவனிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இன்று உயர்மட்ட Advance Security Liaison ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வருடன் தமிழக தொழில்துறை மற்றும் நிதித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் குழுவும் வெளிநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் முதலீட்டாளர்களுடனான சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள உள்ளனர்.
பயணத்தில் புதிய திருப்பம்?
முதல்வர் விஜயின் வெளிநாட்டு பயணத் திட்டம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் செப்டம்பர் 13-ம் தேதி சென்னை வர உள்ளதாக கூறப்படும் நிலையில், விஜயின் வெளிநாட்டு பயண அட்டவணையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை பயணத் திட்டம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதால், இறுதி அட்டவணை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் முக்கியமாகியுள்ளது.
முதல்வரின் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால், சென்னை விமான நிலையம் முதல் லண்டன் வரையிலான பயண ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
