காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 24,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அம்மாநில அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 19 ஆயிரத்து 512 கனஅடியாக சரிந்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 14 ஆயிரம் கனஅடியும், கபினியிலிருந்து 5 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழக – கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதே வேளையில் காவிரி ஆற்றில் குளிக்க 26வது நாளாக தடை தொடர்கிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 24,000 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி,
மேட்டூருக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,864 கனஅடியாக சரிந்துள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 95.55 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 21,500 கன அடி தண்ணீர் சுரங்க மின் நிலையம் வழியாகவும், 2,500 கன அடி தண்ணீர் 16 கண் மதகு வழியாகவும் வெளியேற்றப்படுகிறது.