திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் கைமாறியதாக குற்றச்சாட்டு: 25 நாட்கள் கழித்து அறிக்கை வெளியிட்டதை சுட்டிக்காட்டி கடும் விமர்சனம்!
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கில், திமுக ஆட்சிக்காலத்தில் 2024-ஆம் ஆண்டிலேயே புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் மூடி மறைக்கப்பட்டது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ப. சண்முகம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இவ்வளவு பெரிய வழக்கில் மௌனம் காப்பது ஏன்?
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ப. சண்முகம் தெரிவித்ததாவது:

தனது ஆட்சிக் காலத்தில் இவ்வளவு பெரிய பாலியல் குற்றப் பின்னணி விவகாரம் வெளிவந்தும், அதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தெளிவான பதில் அளிக்காமல் மௌனம் காப்பது ஏன்? சிறுமிகளுக்கு எதிரான இந்தக் கொடூரக் குற்றத்தை மூடி மறைக்க அவருக்கு பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுத்தது யார்?
2024-ஆம் ஆண்டிலேயே புகாருடன் கூடிய ஆதாரங்கள் காவல்துறைக்குக் கிடைத்த போதிலும், அன்றைய திமுக அரசு இதன் மீது எந்தவொரு மேலதிக நடவடிக்கையையும் எடுக்காமல் வழக்கை முடக்கி வைத்தது.
தற்போது விவகாரம் பூதாகரமான பிறகு, சுமார் 25 நாட்கள் கழித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது அவரது பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது,” என்று சாடினார்.
கை மாறியது பல கோடி ரூபாய்
மேலும் தொடர்ந்த அவர், “இந்த வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காக அன்றைய திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பண பலத்திற்கும் அதிகாரத்திற்கும் பணிந்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுத்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாய வேண்டும்” என வலியுறுத்தினார்.
மு.க.ஸ்டாலின் மறுப்பு & விளக்கம்
எதிர்க்கட்சிகள் மற்றும் சி.பி.எம் சண்முகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்:
“திமுக ஆட்சியில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கவில்லை. குற்றவாளிகளைப் பாதுகாக்க திமுக அரசு ஒருபோதும் உடந்தையாக இருந்ததில்லை. அரசியல் லாபத்திற்காகவும், உள்நோக்கத்துடனும் என் மீதும் திமுக அரசு மீதும் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் திமுக எப்போதும் உறுதியாகவே செயல்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
விசாரணை தீவிரமடைந்தது
இருப்பினும், கடந்த ஆட்சியில் பெறப்பட்ட ஆதாரங்கள் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் குறித்த விசாரணைகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெம் வீரமணி மீதான நடவடிக்கை கண்துடைப்பாக இருக்கக் கூடாது! — டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்
