நிர்வாண புகைப்படத்தை அனுப்பி மிரட்டியதால் இளைஞர் தற்கொலை
திருவாரூரில் ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஏரிவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். தாராசுரத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் இவர், ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி செலுத்திய நிலையிலும், ஆன்லைன கடன் செயலி தொடர்ந்து பணம் கேட்டுள்ளது. அதுமட்டுமின்றி ராஜேஷிடம் வீடியோ கால் மூலமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் ராஜேஷின் புகைப்படத்தை நிர்வாணமாக்கி வாட்ஸ் அப்பில் வெளியிட்டு மிரட்டியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அந்த புகைப்படத்தை ராஜேஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, ராஜேஷ் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். கடன் தொகையை ஓராண்டுக்கு முன்பே செலுத்திவிட்ட நிலையில், வாட்ஸ் அப் மூலம் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்ததே இளைஞரின் சாவுக்கு காரணம் என உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.