- Advertisement -
தமிழ்நாட்டில் மூன்றாவதாக உருவாகி வரும் பட்டாபிராம் (டைட்டெல் பார்க்) தகவல் தொழில் நுட்ப பூங்கா – எப்போது செயல்பாட்டிற்கு வரும் என அப்பகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகில் உள்ள பட்டாபிராமில் அரசுக்கு சொந்தமான 48 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட இடத்தில் சரக்கு இரயில் பெட்டி தயாரிக்கும் சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் லிமிடெட் [SSL] எனும் தொழிற்சாலை இயங்கி வந்தது. அந்த நிறுவனம் பல்வேறு காரணங்களால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம் எனும் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வளர்கள் அந்த தொழிற்சாலைக் குறித்த ஆவணங்களை ஆர்.டி.ஐ மூலம் பெற்றனர். மேலும், அந்த இடத்தில் ஐ.டி எனும் தகவல் தொழில் நுட்ப பூங்காவை அரசு அமைத்திட வேண்டும் என்ற திட்டத்தினை கடந்த ஆட்சியளர்களிடம் வழங்கினர்.
அதில் முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்.
மா.பா. பாண்டியராஜனின் விடாமுயற்சியினால் பட்டாபிராம் டைடெல் பார்க் தற்போது உருவாகி வருகிறது.


பட்டாபிராமில் டைடெல் பார்க் திட்டத்தை முன்வைத்தவர்
முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜனின் தொடர் முயற்சியினால், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த 03.09.2017 தேதியில் நடைப்பெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் ”பட்டாபிராமில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என்று அறிவித்தார்”. அதனைத் தொடர்ந்து அதற்கான அரசானண 19.07.2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அதன் பிறகு தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் டிட்கோ பொது நிறுவனத்தின் இணை நிறுவனமான டைடெல் நிறுவனம் மூலம் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு, அங்கு கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைப்பெற்றது.
அரசுத் திட்ட ஒதுக்கீடு
பட்டாபிராமில் 48 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட இடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் டைட்டில் பார்க் அமைக்க ஒதுக்கப்பட்டது. 230 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 5.57 லட்சம் சதுர அடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு பணி தொடங்கியது.
அதன் பின்னர், கொரோனா காலக்கட்டத்தில் இரண்டு ஆண்டிற்கு மேல் பணி தோய்வு ஏற்பட்டது. கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தினால் அதன் மதிப்பீட்டுத் தொகையும் 278.84 கோடி ரூபாய்யாக அதிகறித்தது. தற்போது 21 மாடி கட்டிடமாக உயர்ந்து திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. அந்த வளாகத்தில் அதிநவீன ஸ்கைகார்டன், இணைதள மையம் மற்றும் வணிக மையங்கள் உள்ளிட்ட உலகத்தரத்திலான தொழில் நுட்ப பூங்கா தயாராகி வருகிறது.
சென்னை வடமேற்கு பகுதியில் உருவாகி வரும் இத்தொழில்நுட்பப் பூங்கா ஸ்டார்ட் – அப்கள் மற்றும் IT / ITES நிறுவனங்களின் முகவரியாக திகழும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பூங்காவிற்கான பணி, 2023 -ல் நிறைவுப்பெற்று, மே மாதம் செயல்பாட்டிற்கு வர வேண்டுமென அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா நோய்தொற்று பரவல் மற்றும் இதர இடர்பாடுகளினால், அத்திட்டம் நிறைவேற்றுவதில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது அந்நிலை மாறி பணிகள் வேகமாக நடை பெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழில் நுட்ப பூங்கா வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடை பெற்று வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் இயக்கத்தின் நிர்வாகியும் சமூக ஆர்வளருமான ஜெயக்குமாரிடம் பேசும்போது, பட்டாபிராம் தொழில் நுட்ப பூங்காவின் பணி தற்போது வரை மந்தமாக நடைப்பெற்று வருவதாகவும், அதனால் அடுத்த ஆண்டு செயல்பாட்டிற்கு வருமா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது என தெரிவித்தார்.

மேலும் தொழில் நுட்ப பூங்கவிற்கு எதிராக உள்ள மேம்பாலப் பணியும் மந்தமாக நடைப்பெற்று வருகிறது. அதனால் டைட்டில் பார்க் பணி முடிந்தாலும் மேம்பாலம் பணியினால் மேலும் காலதாமதம் ஆகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறினார்.
டைட்டில் பார்க் பயன்பாட்டிற்கு வந்தால் முதற்கட்டமாக ஐந்தாயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், அடுத்தடுத்த காலக்கட்டத்தில் மறைமுகமாக பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தொழில் நுட்ப பூங்காவினால் இந்நகரம் பல்வேறு விதமான வளர்ச்சிகளை அடையும். பல லட்சக்கனக்கான பேர்களின் வாழ்வாதாரம் பெருகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மேலும் அவர் தெரிவித்தார்.
அதற்கு ஏற்றார்போல் நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் சென்னை தரமணி மற்றும் கோவையில் உள்ள இரு தகவல் தொழில் நுட்ப பூங்காகளைவிட பட்டாபிராமில் கட்டப்பட்டுவரும் பூங்கா பெரியது எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், பூங்காவிற்கு அருகில் உள்ள காலி இடத்தினை தனியார் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை கடந்த அரசு எடுத்து வந்தது. அதனை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் டி.சி.எஸ், விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்கள் அப்பகுதியில் தொழில் நுட்ப பூங்கா அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் நிலை இருந்தது. அதனையும் அரசுக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.



