அமெரிக்கா – ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தை முன்னின்று சாத்தியமாக்கிய பாகிஸ்தானின் ராஜதந்திர முயற்சிகளுக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, ஓமன் வளைகுடா பகுதியில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவது, ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை தொடங்குவது உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் இரு நாடுகளும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலைதளமான ட்ரூத் சோசியலில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருந்த ட்ரம்ப், அதிகாரப்பூர்வ கையெழுத்து விழாவில் அமெரிக்க பிரதிநிதி குழுவை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வழிநடத்துவார் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்திய ஈரான், ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கையெழுத்து விழா நடைபெறும் என அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய பங்கு
அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடைவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை நிரந்தரமாக திரும்பப் பெற இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் கூடுதல் கோரிக்கைகள்
போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தாலும், அமெரிக்கா முடக்கி வைத்துள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்றும், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
உலக பொருளாதாரத்தில் தாக்கம்
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியதாக கூறப்படும் மோதல் உலகளவில் பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற சவால்களை எதிர்கொண்டன.
இந்தியா, சீனா வரவேற்பு
இந்த அமைதி ஒப்பந்தத்தை இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் வரவேற்றுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசிய பதற்றத்தை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் பிராந்திய அமைதி மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு மேம்படும் என்ற நம்பிக்கையையும் இந்தியா வெளிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நிலைப்பாடு தொடரும் கவலை
இதற்கிடையில், லெபனானில் இருந்து பின்வாங்கும் திட்டம் இல்லை என்ற இஸ்ரேலின் நிலைப்பாடு தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானாலும், மேற்காசிய பிராந்தியத்தில் முழுமையான அமைதி நிலவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை – பிரிட்டன் அரசின் புதிய நடவடிக்கை
