2024ஆம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் மாற்றங்களை கொண்டு வந்த ஆண்டாக திகழ்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கையில் தேர்தல் மூலம் புதிய தலைவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். சிரியா, வங்கதேசம் நாடுகளில் போராட்டம் மூலம் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்பட்டு ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதேவேளையில் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்ட தென்கொரிய அதிபரின் அதிகாரம் பறிக்கப்பட்டது உலக நாடுகள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டில் உலகில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
உலக நாடுகளை உலுக்கிய இயற்கை பேரிடர்கள்
2024ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் நாளில், ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மார்ச் – ஏப்ரல் மாதத்தில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தீவிர வானிலை நிகழ்வுகளின் அடிப்படையில் மே குறிப்பாக மோசமாக இருந்தது. இம்மாதத்தில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் எரிமலையின் சரிவுகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட சாம்பல் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்தனர்.
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட கொடிய நிலச்சரிவில் 2,000 பேர் உயிருடன் மண்ணில் புதைத்தனர். அக்டோபரில் ஸ்பெயின் நாட்டின் வாலென்சியா பகுதியில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பெருவெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதே மாதத்தில் பிலிப்பைன்ஸ் டிராமி உள்ளிட்ட பெரிய புயல்களால் தாக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
செப்டம்பர் மாதம் வடஅமெரிக்காவை ஹெலன் அதிதீவிர சூறாவளி புயல் தாக்கியது. இதனால் அமெரிக்காவின் புளோரிடா உள்ளிட்ட 7 மாகாணங்கள் பேரழிவை சந்தித்தன. கனமழை வெள்ளத்திற்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக வறண்ட சஹாரா பாலைவனம் கடலாக மாறியது. இது குறித்த புகைப்படஙகள் வெளியாகி வைரலாகின.
தேர்தல் மூலம் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள்
2024 ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி வீழ்ந்தது. பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, ஸ்டார்மர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
டிசம்பர் 4ஆம் தேதி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு தோல்வி அடைந்தது. பதவியேற்ற 91 நாட்களில் அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. இதேபோல், ஜெர்மனியில், பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸின் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து. இதனால் அந்நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.
அண்டை நாடான இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அக்கூட்டணியின் தலைவரும், மார்க்சிஸ்ட் தலைவருமான அனுர குமார திசநாயகே இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த தேர்தலில் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்சே குடும்பம் படுதோல்வியை சந்தித்தது. மற்றொரு அரசியல் தலைவரான ரணில் விக்ரம சிங்கேவும் மக்களால் நிராகரிக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பி.எம்.எல்-என் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருந்தபோதும், அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி கணிசமான இடங்களில் வென்றது. புதிய அரசு பொறுபேற்ற பின்னர் இம்ரான் கானுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தற்போது வரை அவர் மீது 180க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவில் ராணுவச் சட்டம் அமல்
தென்கொரியாவில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி திடீரென ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்த அதிபர் யூன்சுக் யோல், எதிர்க்கட்சிகள் வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அரசை கவிழ்க்க சதி செயவதாவும் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். எனினும் ராணுவ சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்ததால், ராணுவச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
கொரியா குடியரசில் அமைதியை பாதிக்கும் கிளர்ச்சி செய்ததாகக் அதிபர் யூன் சுக் யோல் மீது அந்நாட்டு நாடாளுமன்றம் குற்றம்சாட்டியது. மேலும் அதிபரின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு இடை நீக்கம் செய்யப்பட்டார். பிரதமர் ஹான் டக்-சூ, அதிபரின் அதிகாரங்களை ஏற்றுக் கொண்டார். ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய குற்றம்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிபர் யூனுக்கு எதிராக விசாரணையும் தீவிரமடைந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் தப்பிய டொனால்டு டிரம்ப்
வரலாற்றில் 2024 ஆண்டு டொனால்ட் டிரம்ப் மீண்டும் வந்த ஆண்டாக நினைவு கூரப்படும். ஏனெனில் தொடர்ச்சியான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்ட பின்னர், டிரம்ப் மீண்டும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்வாகினார். ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அறிவிக்கப்பட்டபோதும், விவாதத்தின் போது தடுமாற்றத்தை எதிர் கொண்தால், துணைஅதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் ஆக்கப்பட்டார். வரி உயர்வை கட்டுப்படுத்துவது, சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பது, உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்கள் ஆகியவை ட்ரம்பின் முக்கிய முழக்கங்களாக இருந்தன.
தேர்தல் பரப்புரையில்போது 2 முறை டிரம்ப்-ஐ குறிவைத்து கொலை முயற்சி நடந்தன. ஜூலை 13 அன்று பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுட்டிருந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருந்து டிரம்ப் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது அவருக்கு ஆதரவை பெருகக்செய்தது. பின்னர் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் டிரம்ப் இமாலய வெற்றி பெற்று அமெரிக்காவின 47-வது அதிபராக தேர்வாகினர். வரும் ஜனவரி மாதம் அவர் அமெரிக்க அதிபராக பொறுபேற்கிறார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் வீழ்ச்சி
மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, ஆகஸ்ட் 5ஆம் தேதி ஷேக் ஹசினா வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஜனவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசினா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகினார். அவரது அரசு கொண்டுவந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டிற்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்து போராடிய எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் மற்றும் ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்தது. துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர்.
இதனால் நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிடம் தஞ்சமடைந்தார். நோபல்பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் பொறுப்பேற்றுள்ளது. ஹசினாவால் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சியினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் புதிய அரசால் வன்முறையை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அண்மை காலமாக வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் விரிவடையும் இஸ்ரேல் ஆதிக்கம்
2024ஆம் ஆண்டில் இஸ்ரேல் அதன் ராணுவ வலிமையை உலகுக்குக் காட்டியது என்று சொன்னால் அது மிகையல்ல. ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக காசாவில் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்த போதே, அதே நேரத்தில் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராகவும் போரை நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி கருவிகளை ஒரே நேரத்தில் வெடிக்கச்செய்து, புதிய போர்முறையை உலகிற்கு அறிமுகம் செய்தது. போரின் உச்சமாக கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது. அடுத்த 15 நாட்களுக்குள் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரையும் பழிதீர்த்தது.
இதன் மூலம் இஸ்ரேலின் இறையான்மைக்கு எதிராக நிற்கும் எவரையும் தன்னால் வெல்ல முடியும் என்பதை இஸ்ரேல் நிரூபித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசமுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு இல்லாவிட்டால் ஹமாஸ் கடும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் வரும் ஆண்டில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சிரியாவில் முடிவுக்கு வந்த அசாத் குடும்ப ஆட்சி!
சிரியாவில் அரை நூற்றாண்டு காலமாக சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த அசாத் குடும்பம், ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அரசு படைகளுக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் எனப்படும் ஹெச்.டி.எஸ் இஸ்லாமிய ஆயுதக்குழு தலைமையிலான கிளர்ச்சிப்படையும், சிரியன் தேசிய ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழுவும் இணைந்து போராடி வந்தன. நவம்பர் பிற்பகுதியில் சிரியாவின முக்கிய நகரமான அலெப்போவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
அதன் பின்னர் பல்வேறு நகரங்களில் மின்னல் வேகத்தில் முன்னேறிய கிளர்ச்சியாளர்கள் டிசம்பர் 8ஆம் தேதி தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர். அதிபர் பஷர் அல்-ஆசாத், தனது குடும்பத்துடன் ரஷ்யாவுக்கு தப்பியோடினார். இதனை அடுத்து, எச்.டி.எஸ் கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். ஆசாத் ஆட்சிக்காலத்தில் சிறை வைக்கப்பட்டவர்களையும் விடுவித்தனர். ஆசாத் குடும்பத்தினரின் 54 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதை சிரியா மக்கள் கொண்டாடி வருகின்றனர். உள்நாட்டு போரினால் வெளி நாடுகளுக்கு அகதிகளாக சென்ற பலரும், நாடு திரும்ப தொடங்கியுள்ளனர். சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் வரும் நாட்களில் மக்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.