
2024ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம்.
ஜனவரி 2024:
* வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து அதன் நினைவுச் சின்னத்தை சென்னையில் வெளியிட்டனர்.
*2024ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில், 2030ம் ஆண்டுக்குள் தமிழக மாநிலத்தினை 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக மாற்றச் செய்வதே இலக்கு என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கான செயல் திட்டத்தையும், மேம்பட்ட மின்னணு கொள்கையினையும் வெளியிட்டார்.
*தமிழ்நாடு அரசினால் நடத்தப்படும் 2024ம் ஆண்டு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. 2 நாள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
* பூந்தமல்லியில் 140 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.500 கோடி செலவில் நவீன திரைப்பட நகரம் கட்டமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
*தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன், இந்திய ஆட்சிப் பணியில் சேர்க்கப்பட்டார். தமிழ்நாட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் சேர்க்கப்பட்ட முதல் பெண் அதிகாரியும், இந்தத் துறையில் இருந்து இந்திய ஆட்சிப் பணியில் சேர்க்கப்படும் முதல் பெண் அதிகாரியும் இவரே ஆவார்.
*சென்னை சங்கமம் வழங்கும் ‘நம்ம ஊரு திருவிழா’வைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில் சென்னை முழுவதும் 18 இடங்களில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கலஞர்களின் நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
* தென்னிந்தியாவில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் முதன்முறையாக நடைபெற்றன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய 4 நகரங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
* கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்த் அவர்களை விஞ்சி இந்தியாவின் முன்னணி சதுரங்க வீரர் என்கிற பெருமையினைப் பெற்றுள்ளார்.
*10வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகப் பொருளாதாரா உச்சி மாநாடு சென்னையில் நடைபெற்றது. இது திருவள்ளுவரின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் செழுமையான இலக்கியங்கள் உலகிற்கு எடுத்துரைக்க உதவியது.
*திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையம் பவானியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் மற்றும் கோவை ஆனைமலையில் உள்ள மாசானியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
* ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தார். பதவியில் உள்ள அக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறை எனப்படுகிறது.
*மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஏறுதழுவுதல் அரங்கு என்னும் ஜல்லிக்கட்டு அரங்க மைதானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிப்ரவரி 2024:
* நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி, அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே இலக்காகக் கொண்டு தமிழக அரசியலில் களம் இறங்கியுள்ளது தவெக.
*12,000 கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளில் உள்ள மாணவர்களுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பினை வழங்கும் கலைஞர் விளையாட்டு உபகரணத் தொகுப்பு வழங்கீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
* திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மலையாளிப் பழங்குடியினத்தைச் சேர்ந்த 23 வயது பெண் வி. ஸ்ரீபதி, தனது சமூகத்திலிருந்து முதல் உரிமையியல் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
*இந்துக்கள் அல்லாதவர்கள் கொயில்களின் கொடிமரத்திற்கு அப்பால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான அறிவிப்புப் பலகைகளை கோயில்களின் நுழைவாயில்களில் உள்ள கொடி மரம் அருகே நிறுவுமாறும் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
* இந்து அல்லாத ஒருவர் கோயிலில் உள்ள சாமியை தரிசிக்க விடும்பினால், ‘குறிப்பிட்ட தெய்வத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், இந்து மதம் மற்றும் கோயிலின் பழக்கவழக்கங்களை பின்பற்றுவேன்’ என்றும் அதிகாரிகளிடம் உறுதிமொழி எழுதிக்கொடுத்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில் உள்ள 80,114.80 ஹெக்டேர் பரப்பிலான காப்புக்காடுகளை ‘தந்தை பெரியார் வனவிலங்குச் சரணாலயம்’ ஆக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தமிழகத்தின் 18வது வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
* ‘சாதி மதம் அற்றவர்’ என்கிற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகளால் வழங்க முடியாது என்றும், அப்படியொடு சான்றிதழை வழங்க அவர்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
*மத்திய அரசின் 2024 – 2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டில், மத்திய வரிகளில் தமிழகத்திற்கான பங்கு ரூ.49,754.95 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 2024 :
*காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி ராஜினாமா செய்ததை அடுத்து, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
*தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பத்தாண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்ட வெளித்துறைமுக சரக்குக் கொள்கலன் கப்பல் முனையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
*சென்னையில் 6.09 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
* மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு 2022ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
* எழுத்தாளர் கண்ணையன் தக்ஷிணாமூர்த்தி எழுதிய ‘கருங்குன்றம்’ புத்தம் 2023ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி (மொழிபெயர்ப்பு) பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
*டாடா மோட்டார்ஸ் குழுமம், தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ரூ.9,000 கோடி முதலீட்டில் வாகனத் தயாரிப்பு மையத்தினை உருவாக்குவதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
*இரண்டாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, 2025ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் 5 நாட்கள் வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. முன்னதாக முதல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற்றது.
* 18வது மக்களவை தேர்தல் 2024ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 01ம் தேதி வரை 7 கட்டகளாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
*மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் , தனது பதவியை ராஜினாமா செய்தார்.
*தமிழ்நாடு பொது நிதி கண்காணிப்பு அமைப்பை (TNPFTS) தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு இது நடைமுறைகளை எளிதாக்குவதை உறுதிசெய்து, கருவூலம் முதல் கடைநிலை பயனாளர்கள் வரையிலான நிதி செயல்பாட்டினை முழுமையாகக் கண்காணிப்பதையும், செலவினங்களை சீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
*மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தியில் கடல் வளம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தினைப் பாதுகாப்பதற்காக வேண்டி நாட்டின் முதல் கடல் சார் வளங்காப்பு படையைத் தமிழக அரசு தொடங்கியது.
* புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
*மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித்திட்டம் – புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், தமிழகம் மூழுவதும் உள்ள உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கு , உயர்க்கல்வி பயில மாதம் ரூ1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
*தமிழகத்தின் உச்சகட்ட மின் தேவையானது, மார்ச் 22ம் தேதியன்று 19,409 மெகாவாட் என்கிற புதிய உச்சத்தை எட்டியது. இது கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பதிவான 19,387 மெகாவாட் என்கிற அதிகபட்ச அளவினை விஞ்சியது.
*மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்குனரகம் 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்தியது.
ஏப்ரல் 2024 :
* தமிழ்நாட்டைச் சேர்ந்த காலச்சுவடு பதிப்பகம் நிறுவனம் 2023ம் ஆண்டின் சிறந்த பதிப்பாளர் விருதினை வென்றது.
*மிக்சாங் புயலின் இரட்டைப் பேரழிவுகள் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத பாதிப்புகளுக்கான சுமார் ரூ.38,000 கோடி மதிப்பிலான பேரிடர் நிவாரண நிதியை வழங்காமல் மத்திய அரசு, தமிழ்நாட்டு மக்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாகக் குற்றம் சாட்டி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
* 1899ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் உலகின் பழமையான சூரிய ஆய்வகங்களில் ஒன்றான கொடைக்கானல் சூரிய ஆய்வகம் (KSO) ஏப்ரல் 1ம் தேதி 125வது நிறைவு நாளைக் கொண்டாடியது.
*தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
*தமிழ்நாடில் மொத்தம் உள்ள 6,23,33,925 வாக்காளர்களில் 4,34,58,875 பேர் தங்கள் வாக்கினை செலுத்தியுள்ளனர். இது முந்தைய பொதுத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட குறைவாகும்.
மே 2024 :
*தமிழில் அதிக பாடல்களை பாடியுள்ள இந்தியப் பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்.
*உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜனைப் பயன்படுத்துவதை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
*126வது மலர்க் கண்காட்சி உதகமண்டலத்தில் நடைபெற்றது.
*மக்களுக்கு ஆபத்தானவையாக கருதப்படும் 33 வகை இன நாய்களை இறக்குமதி செய்யவோ, இனப்பெருக்கம் செய்யவோ மற்றும் விற்பனை செய்யவோ தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை தடை விதித்துள்ளது.
*தமிழகத்தைச் சேர்ந்த பி. ஷியாம் நிகில், நாட்டின் 85வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தினை பெற்றார்.
* பொதுத்தேர்வு எழுதிய 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*தென்காசி, மாயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
*மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM)தரவுகளை விவி பேட் பதிவுகளுடன் கூடிய முழுமையான மறு சரிபார்ப்பு முறையினை கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும் வாக்குச்சீட்டு நடைமுறைக்கு மாற உத்தரவிடவும் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 2024:
*மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டன.
*அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் வங்கிக் கணக்குகளைத் தொடங்குமாறு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது.
* ஜூன் மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 66 பேர் விஷச்சாராயத்தால் உயிரிழ்ந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
* தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான மகப்பேரியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்விக் கழகத்தில் (IOG) அதிநவீன செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) வசதியானது தொடங்கப்பட்டுள்ளது.
* ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இருந்து 7வது முறையாக நாடாளுமன்றத்தின் கீழவையில் இடம்பெற்ற 2வது மக்களவை உறுப்பினர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்த தேர்தலில் வெற்றியினை பதிவு செய்த மிகவும் வயதான வேட்பாளரும் டி.ஆர்.பாலுவே ஆவார்.
*விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலானது.
*கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
*பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் ‘மகளிரால் இயக்கப்படும் பிங்க் ஆட்டோ’ சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியது. 200 மகளிருக்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.
*முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி ‘செம்மொழி நாள் விழா’வாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
*புதுமைப் பெண்கள் திட்டத்தினால் உயர்க்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை சதவீதம் 34% அதிகரித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
*தமிழகத்தில் உள்ள்ட 37,553 அரசுப் பள்ளிகளுக்கு இணைய சேவை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* டெல்டா பாசனத்திற்காக சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும் தேதியான 12ம் தேதி, நடப்பாண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் வழக்கமான தேதி தவறியது இதுவே முதல்முறை ஆகும்.
*தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை, கீழடியில் 10ம் கட்ட அகழாய்வுப் பணி, கொந்தகை 5ம் கட்ட அகழாய்வுப் பணி உள்பட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளை தொடங்கியது.
* பள்ளிகளின் பெயர்களில் இருந்து சாதி முன்னொட்டுக்கள் நீக்கப்பட்டு, பள்ளிகளை அவற்றின் இருப்பிடத்தின் பெயருடன் கூடிய ‘ அரசுப் பள்ளிகள்’ என்று அழைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான தனிநபர் குழு பரிந்துரைத்துள்ளது.
* மேலும், மாணவர்கள் நெற்றியில் திலகமிடுவது, சாதி அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை அணிவது மற்றும் பிற சாதி அடையாளங்களை பள்ளி, கல்லூரிகளில் தடை செய்ய வேண்டும் எனவும், சமூக நீதி மாணவர் படையை (SJSF) அமைக்கவும் இக்குழு பரிந்துரைத்தது.
ஜூலை 2024:
* பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தொடர்பாக இதுவரை சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக 5.000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* (ஆக.22)ஆம்ஸ்ட்ராங் மறைவை அடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் புதிய மாநிலத் தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன், துணைத் தலைவராக டி.இளமான் சேகர், பொருளாளராக கமலவேல்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
* கள்ளச்சாராய உற்பத்தி, விற்பனை மற்றும் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கான அபராதங்களை அதிகரிப்பதற்காக என்று 1937 ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு மாநில அரசின் திருத்தங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
*திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகளின் படி, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இனி காலை 10 மணிக்குப் பதிலாக 9.30 மணிக்கு தொடங்கும். சபாநாயகரின் ஒப்புதலுடன் அவையின் அதிகாரப்பூர்வ அலுவல் நேரத்திற்குப் பின்னரும் அவை நடவடிக்கைகள் நீட்டிக்கலாம்.
* சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சிப் பூங்காவில் ‘6ஜி’ இணைப்பிற்கான மரபார்ந்த மற்றும் குவாண்டம் தகவல் தொடர்பு என்கிற சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 2,500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது முதல் தளத்துடன் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு சுயச்சான்று அடிப்படையில் இணைய வழி கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்திற்கு ( ஜூலை 23) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கினார்.
* சென்னையின் இரண்டாவது விமான நிலையமான காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்தினை உருவாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
*தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டிடங்களை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.
*கோவிட் 19, வரதட்சனை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து வில்லுப்பாட்டு மூலம் விழுப்புணர்வு ஏற்படுத்தி வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த சந்தியா தேவிக்கு, 2024ம் ஆண்டுக்கான சமூக நலத்துறையின் ‘சிறந்த திருநங்கை’ விருது வழங்கப்பட்டது.
* காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
*கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா அனந்தகுமார் மற்றும் திருநெல்வேலி மேயர் P.M.சரவணன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
ஆகஸ்ட் 2024:
*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகரை தமிழக அரசு நியமித்தது.
*நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர், தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் இந்தப் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
* தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்த ஷிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு வீடு மனை விற்பனை தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
*தமிழகத்தைச் சேர்ந்த விமான தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரூமி 1 எனப்படும் ஏவுகனையை உருவாக்கி, 3 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை நிகழ்த்தியது.
*புயல்களை கண்காணிப்பதற்காக ஏற்கடு மற்றும் இராமநாதபுரத்தில் தலா 2 டாப்ளர் வானிலை ரேடார் அமைப்புகளை தமிழக அரசு நிறுவ உள்ளது. ஏற்கனவே சென்னையில் இரண்டும், காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் தலா ஒரு ரேடாரும் உள்ளன.
*சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையம் (SEOC) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது.
*மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் இலக்கியப் படைப்புகளை நாட்டுடைமையாக்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
*மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர் குமரி அனந்தனுக்கு, ‘தகைசால் தமிழர்’விருதை தமிழக அரசு வழங்கியது.
*வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேரும் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, உயர்கல்விக்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என அறிவித்தது.
*கோவை மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளின் புதிய மேயர்களாக கவுன்சிலர் R.ரங்கநாயகி என்பவரும், திரு. ராமகிருஷ்ணன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
* மாநில அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தினை ஆகஸ்ட் 9ம் தேதியன்று கோவையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
*யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றன் ரத்து செய்தது.
*தமிழ்நாட்டில் ரூ.44,125 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
*சென்னை பல்கலைக்கழகம் முதல் வகை கல்வி நிறுவனமாக அந்தஸ்து( தன்னாட்சி கல்வி நிறுவனம்) பெறுவதாக பல்கலைக்கழக மானியக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
* தமிழகத்தில் 67 ஆண்டுகளுக்கு முன்பு கருத்துருவாக்கப்பட்ட அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் பணிகளானது இறுதியாக தொடங்கப்பட்டது.
*தமிழக அரசின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். இவர் தமிழகத்தின் 50வது தலைமை செயலாளர் ஆவார்.
* தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024ல் ரூ.17,616 கோடி முதலீட்டிலான 19 கூடுதல் திட்டங்களுடன் மொத்தம் 47 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.51,157 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 தொழில்துறை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
* பழனியில், இரண்டு நாட்கள் உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது.
* நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதி, வியாழன் அன்று காலை 9.15 மணியளவில் சென்னை பனையூரில் அமைந்துள்ள அவரின் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.
*பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிப்பதற்காக ஆக.28ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
* தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக.27 அன்று அமெரிக்கா சென்றார்.
செப்டம்பர் 2024 :
*சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 வகை இரவு நேர கார் ரேஸ் போட்டிகள் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றன.
*சென்னையில் நடைபெற்ற 2024ம் ஆண்டு தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் MRF சலூன்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்கிற பெருமையை டயானா பூண்டோல் பெற்றார்.
*சென்னை சென்ட்ரலில் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
*பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.
*சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மாணவிகள் முன்னிலையில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை பேசிய விவகாரம் பெரும் சர்சையாக வெடித்தது.
*சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் ஆன்மீக சொற்பொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
*இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
*பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டது.
*மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம்ரவி அறிவித்தார்.
* சிஐடியு தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவன ஊழியர்கள் செப்.9ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
*யுபிஐ மூலம் அபராதம் செலுத்தும் புதிய நடைமுறையை போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்தியது.
*ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலை செய்ய வைத்து , சித்தைரவதை செய்த புகாரில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
*Bun-க்கு GST இல்ல.. ஆனா அதுக்குள்ள வைக்குற Cream-க்கு 18% GST..கடை நடத்த முடியல மேடம்” என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் புகார் தெரிவித்தார். பின்னர் நிதியமைச்சரிடம் , ஸ்ரீனிவாசன் மன்னிப்புக் கேட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது.
*17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் தாயகம் திரும்பினார். இந்த பயணத்தில் 18 நிறுவனங்களுடன் ரூ. 7,616 கோடி முதலீட்டிகான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
*உத்தராகண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த 30 தமிழகர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
* டாடா நிறுவனத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி மதிப்பில் 410 ஏக்கரில் ஜாகுவார் லேன்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் புதிய ஆலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
*சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
*பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். இவர் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
*திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக்கொழுப்பு , மீன் எண்ணெய் ஆகியவை கலந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதில் நெய் விநியோகம் செய்த திண்டுக்கலை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனமும் புகாரில் சிக்கியது.
*விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’, சூரியின் ‘கொட்டுக்காளி’, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, மாரி செல்வராஜின் ‘வாழை’,ப.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ மற்றும் ‘ஜமா’ ஆகிய 6 தமிழ்ப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
* மெய்யழகன் பட புரமோஷனுக்காக ஆந்திரா சென்ற நடிகர் கார்த்தி ‘லட்டு சர்ச்சை’ குறித்து தான் பேசியதற்காக அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கோரினார்.
*முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
*தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை கேட்டுப்பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
*நடிகர் விஜய்யின் தவெக கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கட்சி கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு எப்போதும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுப்பதில்லை என்றும், பிற கட்சிகளின் சின்னங்கள் பெயர்களை பிரதிபலிக்காமல் கொடி இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு என தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தது.
*தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவனர் டி.வெள்ளையன் காலமானார்.
*தமிழகத்தில் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், வனத்துறை அமைச்சராக பொன்முடி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மெய்யநாதன், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மதிவேந்தன் – ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன் – காதி மற்றும் பால்வளத்துறை மற்றும் தங்கம் தென்னரசுவுக்கு – நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
* மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சவரையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கோவி.செழியன், ராஜேந்திரன், ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து விடுதலையான செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கோவி.செழியனுக்கு உயர்க்கல்வித்துறையும், ஆவடி நாசருக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
*1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தொடங்கப்பட்ட திமுக கட்சியின் 75வது ஆண்டு பவள விழா இலட்சினையை முதலவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அக்டோபர் 2024 :
* நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பினார்.
* கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அக்.2ம் தேதி விசிக-வின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில், ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு’மாநாடு நடைபெற்றது.
*சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் , கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
*RSS பேரணியை தொடக்கி வைத்ததால் கன்னியாகுமரி அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகளை பறித்து அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். பதவியைப் பறித்தால் கவலை இல்லை என தளவாய் சுந்தரம் கருத்து தெரிவித்தது பேசுபொருளானது.
*எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூருவில் காலமானார்.
*கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் – சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
*2024 – 2025ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி – 25ம் தேதி நிறைவு பெறுகிறது. அதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 05ம் தேதி – 27ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் – ஏப்ரல் 15ம் தேதி முடிவடைகிறது.
* வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வழகிடக்கு பருவமழை காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தில் பார்க் செய்தனர்.
* சென்னையில் 2 நாட்கள் பெய்த கனமழை காராணமாக, சென்னையில் அம்மா உணவகங்களில் 2 நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
* விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘திராவிடமும் தமிழ்த் தேசியமும்’ எனது இரு கண்கள் என்றும், ‘மதச்சார்பற்ற சமூக நீதி’யே தவெகவின் கொள்கை என்றும் விஜய் அறிவித்தார்.
*திராவிடமும் , தமிழ் தேசியமும் 2 கண்கள் என விஜய் பேசியதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். திராவிடம் வேறு, தமிழ்தேசியம் வேறு இரண்டையும் ஒன்றாக இருக்க முடியாது என விஜயை சாடினார்.
*அக்டோபர் 31ம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (நவ.1) அன்று அரசு விடுமுறை விடப்பட்டது.
*குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
*அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ரூ 411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகாரளித்துள்ளது.
*மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் டானா புயல் உருவானது. இது ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடந்தது.
* முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என அவருக்குச் சொந்தமான இடங்களில் 2 நாட்கள் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
* சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக நடப்பாண்டு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.
*சென்னையில் அக்.31ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.59,640க்கும், ஒரு கிராம் 7,455க்கும் விற்பனைச் செய்யப்பட்டது.
*சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் சர்ச்சையானது.
நவம்பர் 2024:
* சென்னை கொளத்தூரில் ‘முதல்வர் படைப்பகம்’ என்கிற மாநில அரசினால் நடத்தப்படுகின்ற மாநிலத்தின் முதல் இணைப்பணி மற்றும் கற்றல் மையம் திறக்கப்பட்டது.
* கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் எல்காட் தகவல் தொழில்நுட்ப வளாகம் திறக்கப்பட்டது.
*தமிழக அரசின் முன்னாள் உள்துறை செயலாளரும், இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், முதல் மாநில தேர்தல் ஆணையராக இருந்தவருமான கே.மலைச்சாமி காலமானார்.
*2024ம் ஆண்டிற்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது , சென்னை பல்கலை.யின் தமிழ்த்துறையில் பணியாற்றிய தமிழறிஞர் மா.செல்வராசன் பெற்றார்.
*பிரபல தமிழ் சிறுகதை எழுத்தாளரும், பேச்சாளருமான இந்திரா சௌந்தரராஜன் மதுரையில் காலமானார்.
*பட்டாசு ஆலைகளில் பணி புரியும்போது ஏற்படும் விபத்துகளிளில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.
*தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்கிற வேதாந்தாவின் மனுவை, உள்ளூர்வாசிகளின் உடல்நலம் மற்றும் நலன்களின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
*தமிழ்நாட்டில் உள்ள பெகட்ரான் ஐபோன் உற்பத்தில் ஆலையின் 60% பங்குகளை வாங்குவதாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
* ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் 21 அடுக்கலைக் கொண்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய டைடல் தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்.
*பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டமானது, தற்போதுள்ள வடிவிலேயே தமிழகத்தில் செயல்படுத்தப்பட மாட்டாது என்றும், அதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
*தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் பதிவானதால், வெப்ப அலையை தமிழ்நாடு அரசு ஒரு பேரிடராக அறிவித்தது.
*தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் அதிகரித்து மொத்த வக்காளர்களின் எண்ணிக்கை 6.27 கோடியாக அதிகரித்துள்ளது
*தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை பயணத்தின் போது புதிய டைடல் பூங்கா, அவிநாசி மேம்பாலம் விரிவுபடுத்துதல், யானை நடமாட்ட தடுப்பு வேலிகள், பெரியார் நூலகம் உள்ளிட்ட 6 புதிய திட்டங்களை அறிவித்தார்.
* தமிழக அரசின் ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
*(நவ.20) கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிஐ வசம் மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிசம்பர் 2024:
*ஃபெஞ்சல் புயல் மற்றும் அதிதீவிர மழை காரணமாக கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 30 பேர் உயிரிழந்த நிலையில், 1 லட்சத்து 69 ஆயிரத்து 43 கால்நடைகள் பலியாகின.
*திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள மலையின் கிழக்குப் பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
*ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததால் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதுமாக வரலாறு காணாத மழை பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 48 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
* சென்னை நந்தம்பாக்கத்தில், விசிக பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா எழுதிய ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசினார்.
*தமிழ்நாட்டில் மன்னராட்சி நடப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதால், அது குறித்து விளக்கம் கேட்கப்படுமென அறிவித்த திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார்.
*வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
*உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடரில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார்.
*ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், டிசம்பர் 14 அன்று காலமானார். முன்னதாக நவம்பர் 13 அன்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.