spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு‘தமிழைத் தேடி...’ பரப்புரை பயணம் வெற்றி- ராமதாஸ்

‘தமிழைத் தேடி…’ பரப்புரை பயணம் வெற்றி- ராமதாஸ்

-

- Advertisement -

‘தமிழைத் தேடி…’ பரப்புரை பயணம் வெற்றி- ராமதாஸ்

தமிழைத் தேடி…’ பரப்புரை பயணம் வெற்றி பெற்றுள்ளதாகவும், அன்னைத் தமிழைக் காக்க இயக்கம் தொடரும் என்றும் பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ramadoss

we-r-hiring

இதுதொடர்பாக ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் அன்னைத் தமிழைக் காக்கும் நோக்கத்துடன், “தமிழைத் தேடி…” என்ற தலைப்பில் சென்னை முதல் மதுரை வரை நான் மேற்கொண்ட விழிப்புணர்வு பரப்புரை பயணம் மதுரையில் நேற்று வெற்றியாக நிறைவடைந்திருக்கிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் வெற்றி பெற்றிருக்க முடியாது. அதற்காக தமிழக மக்களுக்கு நான் எனது நன்றிகளை அடிமனதின் ஆழத்திலிருந்து வெளிப்படுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் பசிப்பிணி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்தச் சிக்கலையும்விட அழிந்து வரும் அன்னைத் தமிழைக் காக்க வேண்டியதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. அதனால்தான் தமிழை சிதைவிலிருந்தும், அழிவிலிருந்தும் காப்பாற்ற வேண்டியதன் தேவையை வலியுறுத்தி, ‘தமிழைத் தேடி…’ என்ற தலைப்பிலான பயணத்தை, உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில் தொடங்கினேன்.

தொடர்ந்து மறைமலைநகர், மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, குத்தாலம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று மாலை தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்கள், புதுச்சேரி ஒன்றியப் பகுதி வழியாக 1,000 கல் தொலைவுக்கும் கூடுதலாக தமிழைத் தேடி பரப்புரை பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன்.

ramadoss

அன்னைத் தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பு என்பது இன்றோ, நேற்றோ ஏற்பட்டது அல்ல. அது 1,000 ஆண்டுகளுக்கும் முன்பாக மேற்கொள்ளப்பட்ட பண்பாட்டுத் தாக்குதலின் தாக்கம் ஆகும். இந்த சீரழிவில் இருந்து ஒரே ஒரு விழிப்புணர்வு பரப்புரை பயணத்தின் மூலம் தமிழை மீட்டெடுத்துவிட முடியும் என்று நான் நம்பவில்லை.

கடந்த காலங்களில் மறைமலையடிகள், பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், கி.ஆ.பெ.விசுவநாதம், பரிதிமாற்கலைஞர், பெருஞ்சித்திரனார் என ஏராளமானோர் இதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். அவர்களின் வரிசையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டுவரும் நான், அன்னைத் தமிழைக் காக்க மேற்கொண்ட இன்னொரு முயற்சிதான் இந்தப் பயணம் ஆகும்.

தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்திற்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்களில் பலர் இந்தப் பயணத்தில் பங்கேற்று என்னை வாழ்த்தியுள்ளனர்.

தமிழைக் காப்பதற்கான இந்தப் பரப்புரைப் பயணத்தின் பொதுக் கூட்டத்தை தஞ்சாவூரில் நடத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் அதன் அரங்கத்தை வழங்கியது. அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பொதுக் கூட்டத்திற்கு தலைமையேற்று சிறப்பித்தார். தமிழ்நாடு முழுவதும் தமிழ் மொழி வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழ் மொழியில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இது தொடர்பாக துண்டறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, வணிகப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழைத் தேடி பரப்புரை பயணத்தால் ஏற்பட்டுள்ள நல்மாற்றம் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியதில்லை.

ramadoss

இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. ஆனால், அன்னைத் தமிழ்மொழியின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு மிகவும் அதிகம். பிறமொழிக் கலப்பு என்ற 1000 ஆண்டுகால சீரழிவை ஓரிரு ஆண்டுகளில் சரிசெய்துவிட முடியாது. அதனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அன்னைத் தமிழை சிதைவிலிருந்து மீட்டெடுக்கும் வரை தமிழைத் தேடிய எனது பயணம் தொடரும். ‘தமிழைத் தேடி…’ என்பது விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் மட்டுமல்ல… அது ஓர் இயக்கம். இந்த இயக்கம் தமிழ் காக்கும் பணிகளைத் தொடரும். தமிழைத்தேடி… இயக்கம் எந்த மொழிக்கும் எதிரானது அல்ல.

அனைத்து மொழியினரும் அவர்களின் தாய்மொழியை பிறமொழிக் கலப்பின்றி பேசவேண்டும் என்பதுதான் எனது நோக்கமும், விருப்பமும் ஆகும். எங்கும் தமிழ்… எதிலும் தமிழ் என்ற இலக்கை எட்டுவது அரசின் கைகளில் மட்டும் இல்லை; தமிழறிஞர்களின் கைகளில் மட்டும் இல்லை; பொதுமக்களின் கைகளில் மட்டும் இல்லை; பள்ளிகளை நடத்துபவர்களின் கைகளில் மட்டும் இல்லை. இந்த நான்கு தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் மட்டும் தான் தனித்தமிழ் பயன்பாட்டை உறுதிசெய்ய முடியும்.

அதற்காக தமிழ் கட்டாய பயிற்று மொழிச் சட்டம், தமிழ்மொழி பாதுகாப்புச் சட்டம், தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கச் செய்தல், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தல், தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவித்தல், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு, தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு உயர்கல்வியில் 30% இடஒதுக்கீடு, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்ப்பாட மதிப்பெண்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழைத் தேடி பரப்புரை பயணத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் செயல்வடிவம் கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், பொதுமக்களும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து தமிழ் மொழியிலேயே பேசவும், எழுதவும் செய்யவேண்டும். தமிழ்ச் சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், தமிழ் கண்டிப்பாக அரியணையில் ஏறும். இதை உணர்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் இணைந்துபாடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ