மத்தியப்பிரதேசத்தில், உஜ்ஜயினி நகருக்கு அருகில் உள்ள பிடவாட் கிராமத்தில் ஒரு தனித்துவமான பாரம்பரியம் விழா நிகழ்த்தப்படுகிறது. இதில், பலர் தரையில் படுத்திருக்க, டஜன் கணக்கான பசு மாடுகள் அவர்களை கடந்து சென்றன. இந்த சடங்கின் மூலம் தங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதாகவும், பசுவின் காலடியில் மிதிபடுவதால் முப்பத்து மூன்று கோடி தெய்வங்களின் ஆசிகள் கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.
இந்த சடங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் இரண்டாவது நாளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மக்கள் ஐந்து நாட்கள் விரதம் அனுசரித்து தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக கிராம மாதா கோவிலில் தங்குவார்கள். இந்த நேரத்தில் அவர்கள் பஜனைகள் மற்றும் கீர்த்தனைகளை பாடுவார்கள்.
பத்வா தினத்தன்று காலையில் வழிபாடு செய்யப்படுகிறது. பின்னர் மேளம், இசைக்கருவிகள் முழங்க கிராமத்தை வலம் வருவார்கள். இதற்குப் பிறகு, கிராமத்தின் அனைத்து மாடுகளும் ஒரே இடத்தில் கூடுகின்றன. மறுபுறம், இந்த பாரம்பரியத்தை பின்பற்றுபவர்கள், தங்கள் விருப்பம் நிறைவேற தரையில் படுத்துக் கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் அனைத்து மாடுகளும் கால்களால் மிதித்து அவர்களை கடந்து செல்கின்றன.
இதைத் தொடர்ந்து, இந்த சடங்கில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று மேளம் தாளத்திற்கு நடனமாடத் தொடங்குகிறார்கள். கிராமம் முழுவதும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த தனித்துவமான பாரம்பரியத்தைக் காண அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள்.