அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் உடனடியாக e-KYC செயல்முறையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கட்டாயமாக e-KYC (மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு) செயல்முறையை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தச் சரிபார்ப்பை மேற்கொள்ளத் தவறினால், ரேஷன் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்படும் என்றும், அதன் மூலம் அரசு வழங்கும் இலவச உணவு தானியங்கள் மற்றும் பல்வேறு நலத் திட்டங்களின் பயன்கள் கிடைக்காது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டை என்பது உணவுப் பாதுகாப்பு மட்டுமல்லாமல், பெண்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து உதவிகள், குழந்தைகளுக்கான கூடுதல் உணவு, நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்கும் வசதி போன்ற பல்வேறு நலச் சலுகைகளுக்கான அடிப்படை ஆவணமாக விளங்குகிறது. மேலும், குடும்ப அட்டை பெரும்பாலும் பெண்களின் பெயரில் இருப்பதால், அரசு வழங்கும் பல திட்டங்களை அதிகாரப்பூர்வமாகப் பெறும் உரிமையையும் அது உறுதி செய்கிறது.
இந்த நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், போலி ரேஷன் அட்டைகள், இறந்தவர்களின் பெயர்கள் தொடர்வது, ஒரே குடும்பத்தில் பல அட்டைகள் பயன்படுத்தப்படுவது போன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக e-KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
e-KYC என்பது ஆதார் எண், மொபைல் எண்ணுக்கு வரும் OTP அல்லது கைரேகை (Biometric) மூலம் அட்டைதாரரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆன்லைன் சரிபார்ப்பு முறையாகும். ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் அட்டையை ஆதாருடன் இணைத்து, தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்க வேண்டும்.
இந்தச் செயல்முறையை நிறைவேற்ற ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் செயல்பாட்டிலுள்ள மொபைல் எண் ஆகியவை அவசியமாகும். மாநில அரசுகள் கோரும் பிற ஆவணங்களும் சரியாக இருந்தால், தொழில்நுட்ப சிக்கல்கள் இன்றி e-KYC செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
e-KYC-க்கான காலக்கெடு ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுவதால், பொதுமக்கள் தங்கள் மாநில அரசின் அறிவிப்புகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் சரிபார்ப்பு செய்யத் தவறினால், ரேஷன் விநியோகம் நிறுத்தப்படுவதுடன், பல்வேறு நிதி உதவித் திட்டங்களும் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.
நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம், பொதுமக்கள் ரேஷன் கடைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே e-KYC-ஐ முடிக்க முடியும். ‘Mera KYC’, ‘Face RD’ போன்ற அதிகாரப்பூர்வ செயலிகளை பயன்படுத்தி, ஆதார் எண் மற்றும் முக ஸ்கேன் (Face Scan) மூலம் எளிதாக சரிபார்ப்பை மேற்கொள்ளலாம். சரிபார்ப்பு முடிந்ததும், அதற்கான டிஜிட்டல் ரசீதையும் உடனடியாகப் பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் உடனடியாக e-KYC செயல்முறையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நான்கரை ஆண்டுகளாக வெறும் விளம்பர நாடகங்களை நடத்தி வரும் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு


