spot_imgspot_img
Homeசெய்திகள்இந்திய ஜனநாயகத்தைத் தாங்கும் ஏணியாய் திமுக… துரோகத்தை மட்டும் செய்யும் காங்கிரஸ்…

இந்திய ஜனநாயகத்தைத் தாங்கும் ஏணியாய் திமுக… துரோகத்தை மட்டும் செய்யும் காங்கிரஸ்…

-

- Advertisement -

இந்திய ஜனநாயக வரலாற்றில் காங்கிரஸோ திமுகவைத் தமிழ்நாட்டில் வெல்வதற்கான ஒரு ஏணியாக மட்டுமே பார்க்கிறது. அந்த ஏணி (திமுக) இன்றும் அதே இடத்தில் உறுதியாக நின்று இந்திய ஜனநாயகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.இந்திய ஜனநாயகத்தைத் தாங்கும் ஏணியாய் திமுக… துரோகத்தை மட்டும் செய்யும் காங்கிரஸ்…

இந்திய ஜனநாயக வரலாற்றில் கூட்டணிக் கோட்பாடு என்று வரும்போது, திமுகவின் விசுவாசத்திற்கும் அது கொடுத்த விலைக்கும் காங்கிரஸ் கட்சி உரிய அங்கீகாரத்தை அளித்ததா என்றால், இல்லை என்பதே வரலாறு. துரோகத்தை மட்டுமே செய்து வருகிறது.

we-r-hiring

திமுகவிற்கு “தோழமை” என்பது ஒரு கொள்கை முடிவு. ஆனால் காங்கிரசுக்கோ அது ஒரு தேர்தல் கால உத்தி மட்டுமே.

1969ம் ஆண்டில் காங்கிரஸ் (R) – இந்திரா அணி, காங்கிரஸ் (O) – ஸ்தாபன காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சி பிளவுபட்ட பிறகு, இந்திரா காந்தி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. அப்போது திமுகவிடம் 25 மக்களவை உறுப்பினர்கள் இருந்தனர். இந்த 25 எம்.பி.க்களின் ஆதரவுதான் அன்று இந்திரா காந்தி ஆட்சியைக் கவிழாமல் காப்பாற்றியது.

அதுமட்டுமா? ஆகஸ்ட் 1969-ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து, இந்திரா காந்தி ஆதரவோடு வி.வி. கிரி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுகவின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் வி.வி. கிரிக்கு ஒட்டுமொத்தமாகச் சென்றன. மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வி.வி. கிரி வெற்றி பெற்றார் என்பதால், திமுகவின் வாக்குகளே அதில் தீர்மானிக்கும் சக்தியாக (Decisive Factor) அமைந்தன.

மேலும், வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று 1969-ல் டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் வலியுறுத்தியவர் கலைஞர். இந்திரா காந்தி அந்த முடிவை எடுத்தபோது, அதற்கு நாடாளுமன்றத்தில் முழுமையான ஆதரவை திமுக வழங்கியது.

ஆனால் ஆபத்தில் உதவியதற்குப் பரிசாக, 1976-ல் நெருக்கடி நிலையின்போது (Emergency) அதே இந்திரா காந்தி, கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியை ஈவு இரக்கமின்றி கலைத்தார். மிசா எனும் கொடுஞ்சிறையில் திமுக தலைவர்கள் சித்திரவதை அனுபவித்தார்கள். நண்பன் என்று கூடப் பார்க்காமல், சர்வாதிகாரியாகவே காங்கிரஸ் கோர முகம் காட்டியது.

பின்னர் 1980-ல் “நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக” என்று இந்திராவுக்காகக் குரல் கொடுத்தது திமுக. இருப்பினும், 1991-ல் ராஜீவ் காந்திக்கும் சந்திரசேகருக்கும் இடையிலான ஈகோ மோதலில் தமிழ்நாடு அரசு மீண்டும் பலிகடாவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகளைக் காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி, மக்கள் செல்வாக்கு மிக்க திமுக ஆட்சியை, சந்திரசேகர் மூலமாக கலைத்து, ஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் நெரித்தது காங்கிரஸ்.

அதன் பிறகு 2004-ல் ஒரு முக்கியமான அரசியல் சூழல் உருவானது. சோனியா காந்தியை ‘அயல்நாட்டவர்’, அவரைப் பிரதமராக்கக் கூடாது என்று எதிர்க்கட்சியான பாஜக போர்க்கொடி தூக்கியது. ஏன், காங்கிரசில் இருக்கும் பல தலைவர்களே கூட சோனியாவை எதிர்க்கத் துணிந்த நேரம் அது. யாருமே ஆதரிக்கத் தயங்கிய அந்த நேரத்தில், இந்தியாவிலேயே முதல் ஆளாக, மாற்றுக் கட்சியிலிருந்து “சோனியா காந்திதான் பிரதமர்” என்று அவருக்கு ஆதரவாக உரத்த குரலில் பேசியவர் கலைஞர்.

அத்தகைய தார்மீக ஆதரவை வழங்கியதோடு மட்டுமல்லாமல், சோனியா காந்தியின் கரம் வலுப்பட 40 தொகுதிகளையும் வாரி வழங்கியது திமுக. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 1 மற்றும் 2-ல் மத்திய அரசு முழுமையாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்ய திமுகவின் ஆதரவே அச்சாணியாக இருந்தது.

ஆனால், 2ஜி விவகாரம் வெடித்தபோது, கூட்டணிக் கட்சியான திமுகவை காங்கிரஸ் தற்காத்துப் பேசவில்லை. பழியைத் திமுக மீது மட்டும் சுமத்திவிட்டு, தான் மட்டும் “தூய்மையானது” போலக் காட்டிக்கொண்டு, கூட்டணியில் இருந்தபடியே திமுகவை தனிமைப்படுத்தியது. ஆனால் அந்தத் துரோகத்தின் பலனை இன்றுவரை காங்கிரஸ் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

இன்றும் கூட, காங்கிரசே தயங்கியபோதும் பாஜகவை எதிர்க்கத் தேசிய அளவில் ராகுல் காந்திதான் சரியான முகம் என்று முதன்முதலில் அறிவித்தது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். வட இந்தியாவில் காங்கிரஸ் சறுக்கும்போதெல்லாம், தெற்கிலிருந்து அக்கட்சிக்கு ஆக்ஸிஜன் கொடுப்பது திமுகவின் கூட்டணி பலமே.

திமுகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்பது மதச்சார்பின்மையைக் காப்பதற்கான ஒரு கருவி. அதனால் எத்தனை முறை முதுகில் குத்தப்பட்டாலும் “நாட்டின் நலன்” கருதி திமுக கைகோர்க்கிறது. ஆனால், காங்கிரஸோ திமுகவைத் தமிழ்நாட்டில் வெல்வதற்கான ஒரு ஏணியாக மட்டுமே பார்க்கிறது. ஏறியவுடன் ஏணியை எட்டி உதைக்கும் வழக்கத்தைக் காங்கிரஸ் கொண்டிருந்தாலும், அந்த ஏணி (திமுக) இன்றும் அதே இடத்தில் உறுதியாக நின்று இந்திய ஜனநாயகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், திமுக காங்கிரஸுக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் திமுகவுக்கு ஒரு நல்ல ‘பயனாளியாக’ (Beneficiary) மட்டுமே இருந்துள்ளது!

டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்…

MUST READ