spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கழகத்துக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி – துணை முதல்வர்

கழகத்துக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி – துணை முதல்வர்

-

- Advertisement -

சென்னை: திருவண்ணாமலையில் நாளை மறுநாள் (டிசம்பர் 14) நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு குறித்து இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கழகத்துக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி – துணை முதல்வர்இது குறித்து துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”75 ஆண்டுகளைக் கடந்து, தமிழர்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பது, கழக இளைஞர் அணி. 1980-ல் இன்றைய கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட கழக இளைஞர் அணி, கழகத்துக்கு வலிமை சேர்த்து, களத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாடு முழுவதும் தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எனக் கணிசமான கழக செயல்வீரர்கள் இளைஞர் அணி பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர்களே.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளைத் திசையெங்கும் கொண்டு செல்லும் கருத்தியல் பணிகள் ஒருபுறம், கட்டமைப்பை வலுப்படுத்தி கழகத்தின் வெற்றிகளுக்குத் துணைநிற்கும் அரசியல் பணிகள் இன்னொருபுறம் என்று இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கிறது இளைஞர் அணி. திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகளைப் பதியும் “முரசொலி பாசறைப் பக்கம்“, வரலாற்றை நினைவுகூர்ந்து வாசிப்பை விரிவு செய்யும் “முத்தமிழறிஞர் பதிப்பகம்“,  திசையெங்கும் திராவிடத்தைக் கொண்டு சேர்க்கும் 200-க்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்கள், கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம், 75 ஆண்டுக்கால தி.மு.க வரலாற்றுப் பங்களிப்புகளை 1,120 பக்கங்களில் விவரிக்கும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல், சமீபத்தில் தமிழ்நாடே கொண்டாடிய ‘அறிவுத் திருவிழா’ என்று இளைஞர் அணி தொடர்ந்து கருத்தியல் பணிகளை ஆற்றி வருகிறது.

we-r-hiring

இன்னொரு புறம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம், நீட் தேர்வை ஒழிக்க வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம், நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம், தொகுதி மறுசீரமைப்பு, இந்தித் திணிப்பு, நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம் ஆகியவற்றைக் கண்டித்து தெருமுனைக்கூட்டங்கள் என்று மக்கள் பிரச்சினைகளுக்காகவும் கழக இளைஞர் அணி தொடர்ந்து களத்தில் நிற்கிறது என்றால், அதற்குக் காரணம், இளைஞர் அணியின் வலுவான கட்டமைப்பே. மாநிலம் – மாவட்டம் – மாநகரம் – பேரூர் – ஒன்றியம் – கிளை – வட்டம் என்று தமிழ்நாட்டின் எல்லாத் திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது கழக இளைஞர் அணி. வழக்கமான நிர்வாக அமைப்புடன் இந்த ஆண்டு இரண்டு புதிய முன்னெடுப்புகளையும் கழக இளைஞர் அணி மேற்கொண்டிருக்கிறது.

இளைஞர் அணியின் சமூகவலைதளப் பக்கங்களை நிர்வகிப்பதற்கு என்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் சமூக வலைதளங்களுக்கான துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம். ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைகளிலும் நகர, பகுதி, பேரூர், வார்டுகளிலும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு நிர்வாகிகளை நியமித்திருக்கிறோம். இப்படி, கழகத் தலைவர் வழிகாட்டலில், தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகளைக் கொண்ட வலுவான அணியாக விளங்குகிறது கழக இளைஞர் அணி. இப்படி, 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று வலுவான கட்டமைப்பைக் கொண்டு செயல்படும் இளைஞர் அமைப்பு, இந்திய அளவில் தி.மு.க. இளைஞர் அணி மட்டுமே.

இப்படி, நியமிக்கப்பட்ட 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற கழகத் தலைவர் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 14.12.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடத்தவிருக்கிறோம். 1.30 லட்சம் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட நிகழ்ச்சியாக நடக்கவிருக்கும் இந்த ‘வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறப்புரை ஆற்றவிருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத் தலைவரே மீண்டும் முதலமைச்சர் ஆவார், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்னும் வெற்றிச் செய்திக்கு அடித்தளமாக இந்த ‘இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும் என்பது உறுதி“ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

சின்னதிரை நடிகை மரணம்…குடும்பத்தாரிடம்  போலீசார் விசாரணை…

MUST READ