மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிசம்பர் 31, 2025-க்குள், பான் கார்டு வைத்திருக்கும் அனைத்து பொதுமக்களும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், வருமான வரி தாக்கல் செய்ய, வங்கிக் கணக்கு தொடங்க அல்லது வேறு ஏதேனும் நிதிச் செயல்பாடு செய்ய, நிரந்தரக் கணக்கு எண் (PAN) அத்தியாவசியமாகிவிட்டது. ஆனால் உங்கள் ஆதார் எண்ணை பான் உடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஜனவரி 1, 2026 முதல் உங்கள் பான் கணக்கு முடக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பில் , டிசம்பர் 31, 2025-க்குள், பான் கார்டு வைத்திருக்கும் அனைத்து மக்களும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதைச் செய்யாவிட்டால், அவருடைய பான் கணக்கு முடக்கப்படும்.
அதன் பின்னா், அனைத்து நிதி நடவடிக்கைகளிலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டாலும், பான் கணக்கையும் ஆதாரையும் இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2025 என்று நீட்டிக்கப்பட்டிருந்தது.

பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்? இன்று, பல இடங்களில் பான் எண்ணும் ஆதார் அட்டையும் தேவைப்படுவதால், பான் இல்லாமல் செயல்படுவது சாத்தியமில்லை. உதாரணமாக, பான் எண் முடக்கப்பட்டால், உங்களால் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியாது. டீமேட் கணக்கையும் தொடங்க முடியாது. அதனால் நீங்கள் பங்குச் சந்தையிலோ அல்லது ஈடிஎப்ஃகளிலோ வர்த்தகம் செய்ய முடியாது. ரூ.50,000-க்கு மேல் நிலையான வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டுமானால் பான் அவசியம் தேவைப்படுகிறது. சில அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கும் பான் கணக்கு அவசியம்.
குறிப்பாக, பான் இல்லாமல் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. பான் இல்லாமல், வங்கிகளிடமிருந்தோ அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடன் கூட பெற முடியாது. வாகனம் வாங்கவோ அல்லது வீடு வாங்கவோ பான் கார்டு அவசியமான ஒன்றாகியுள்ளது. அது செயலிழக்கப்பட்டால், பல சிக்கல்கள் அதிகரிக்கும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளை செய்ய விரும்பினால், செயல்பாட்டில் உள்ள பான் எண் இருப்பது அவசியம். பான் முடக்கப்பட்டிருந்தால், வரிப் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வட்டி எதுவும் வழங்கப்படாது. அதேபோல், உங்கள் டிடிஎஸ் (TDS – வருமான வரி பிடித்தம்) மற்றும் டிசிஎஸ் (TCS – பொருட்களின் விற்பனையின் போது அல்லது சேவைகளுக்கான கட்டணத்தைப் பெறும்போது வாங்குபவரிடமிருந்து வசூலிக்கும் வரி) ஆகியவை அதிக விகிதத்தில் கழிக்கப்படும்.
பான் எண்ணை ஆதார் உடன் இணைப்பது எப்படி? பான் மற்றும் ஆதாரை ஆன்லைனில் எளிதாக இணைத்துக் கொள்ளலாம். பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் எளிது. முதலில், வருமான வரித் துறையின் மின்-தாக்கல் (e-filing) இணையதளமான http://incometax.gov.in/iec/foportal/ -க்கு செல்ல வேண்டும். அங்கு, இடது பக்கத்தில் ‘Link Aadhaar’ (‘ஆதார் இணைப்பு’) என்ற குறியீடு உள்ளது. அதைக் கிளிக் செய்து, உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிடுங்கள். பிறகு ‘சரிபார்க்கவும்’ எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். ஏற்கெனவே பான் –ஆதார் இணைக்கப்பட்டிருந்தால், உடனே ஒரு அறிவிப்பு வரும். இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் மொபைல் எண் கேட்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, அந்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். ஓடிபி-ஐ உள்ளிட்டவுடன், பான் மற்றும் ஆதார் இணைக்கப்படும். பான்-ஆதாரை குறுஞ்செய்தி மூலமாகவும் இணைக்கலாம். நீங்கள் குறுஞ்செய்தி மூலமாகவும் பான் மற்றும் ஆதாரை இணைக்கலாம். அதற்கு, உங்கள் மொபைலில் கீழே உள்ள வடிவில் தட்டச்சு செய்யவும். UIDPAN <இடைவெளி> <12 இலக்க ஆதார் எண்> <இடைவெளி> <10 இலக்க பான் எண்> பின்னர் அதை 567678 அல்லது 56161 க்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும்.
எடுத்துக்காட்டு:
UIDPAN 111122223333 AAAPA9999Q மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கொடுத்த காலக்கெடுவுக்குள் பான் –ஆதார் இணைக்கவில்லை என்றால், பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர ரூ.1,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல, அதை மீண்டும் செயல்படுத்த விண்ணப்பித்த பிறகு, பான் மீண்டும் செயல்பாட்டுக்கு வர ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம். எனவே விரைவில் பான் மற்றும் ஆதாரை இணைத்திடுங்கள்.


