இறந்தவரின் உறுப்புகளை தானம் பெறுவதற்கான உச்சவயது வரம்பு நீக்கம்
உறுப்பு தானத்துக்கு இறந்தவரின் உறுப்புகளை தானம் பெறுவதற்கான உச்சவயது வரம்பு நீக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசின் புதிய விதிமுறைகளின்படி, உயிரிழந்தவர்களின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான 65 வயது என்ற உச்ச வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்த வயது நபரும், இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம். இதே போல, இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த வாழுமிடம் போன்ற விதிமுறையையும் ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் மூன்றடுக்கு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. மேலும், இது தொடர்பாக www.notto.gov.in என்ற இணையதளமும், 1800114770 என்ற உதவி எண்ணுடன் கூடிய 24 மணி நேரமும் இயங்கும் இலவச அழைப்பு மையமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இத்தகவலை மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.