வைரஸ் காய்ச்சல் எதிரொலி: பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. சளி, இருமல், தசைவலி ஆகியவை அறிகுறிகளாக காணப்படும் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் எட்டு பேருக்கு H1 N1 வைரஸ் இருப்பதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக பரவிவருகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு, காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. அதே சமயம் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் வேகமும் அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் காய்ச்சல் எதிரொலியால் பொதுத்தேர்வு எழுதும் ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.