வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் நடிப்பில் கடைசியாக தங்கலான் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் துருவ நட்சத்திரம் திரைப்படம் பல வருடங்களுக்கு முன்பாகவே உருவாகி ரிலீஸ் செய்யப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் நடிகர் விக்ரம், மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு வீர தீர சூரன்- பாகம் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் இசையிலும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவியிலும் இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படமானது வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை வருகின்ற மார்ச் 15ஆம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.