மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,000 பேரை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கானத்தூர், ரெட்டி குப்பம், கோவளம் பகுதிகளில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மழைக்கால நிவாரண உதவி பொருட்களை அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். இந்த மாவட்டத்தில் மட்டும்
206 தங்கும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் இதில் 20 ஆயிரம் பேர் தங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். அதேபோல்
முகாம்களில் தங்கி இருக்கும் நபர்களுக்கு உணவும் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் புயல் கரையை கடந்த பிறகு தேவை ஏற்பட்டல் மாற்றம் செய்ய மின் கம்பங்கள் 600 தயாராக இருப்பதாகவும் மரங்கள் முறிந்து விழுந்தால் உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகாரிகள் மட்டுமில்லாமல் சமூக அமைப்புகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கை நிவாரணப் பணிகளில் செயல்பட்டு வருவதாகவும் 120 பேரிடர் மீட்புக் குழுவினர் தயாராக இருப்பதாகவும் தா.மோ.அன்பரசன் கூறினார்.