தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கவே வாய்ப்பு உள்ளது என்றும், தேமுதிக முதுகில் குத்துபட போவது உறுதி என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

திமுகவில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் அதிமுக கூட்டணியில் ஒரு இடம் எந்த கட்சிக்கு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மெகா கூட்டணியை கட்டமைப்போம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். ஆனால் அவர் தேமுதிக உடன் மட்டும்தான் கூட்டணி அமைத்தார். பெரிய கட்சிகள் எதுவும் அவருடன் கூட்டணி வைக்கவில்லை. அந்த தேர்தலின்போது பிரமேலதாவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவை தேர்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகிறபோது, பிரேமலதா அந்த சமயத்தில் வேட்பாளரை அறிவிப்பேன் என்று சொன்னார். அப்போது எடப்பாடி பழனிசாமி அதனை மறுத்துவிட்டார். இது தேமுதிகவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக தரப்பில் மாநிலங்களவை சீட் தருவதாக சொல்லப்பட்டது உண்மை என்றால் பிரேமலதா அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு வாய் மொழியாக உறுதி அளிக்கப்பட்டிருக்கலாம். எடப்பாடி பழனிசாமி இவ்வளவு உறுதியாக சொல்கிறார் என்றால், வாய்மொழியாக தான் உறுதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எடப்பாடியை பொருத்தவரை தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு ஆகும். மற்றொரு விஷயம் சட்டமன்றத் தேர்தலுக்கு மெகா கூட்டணி கட்டமைக்க வேண்டும். பாமகவா?, தேமுதிகவா? என்று பார்க்கிற போது பாமக அவர்களுக்கு சரியானதாக தோன்றலாம். 2 இடங்களில் ஒன்று பாமகவுக்கும், மற்றொரு இடத்தை அதிமுக தலைவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். ஒரு இடத்தில் அதிமுக வென்றுவிடலாம். மற்றொரு இடத்திற்கு பாஜக, பாமக, ஓபிஎஸ் தரப்பின் ஆதரவு தேவையாகும். அப்படி பார்க்கிறபோது பாமக உடனிருந்தால் சரியாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கலாம். தற்போது பாமக தலைவர் அன்புமணிக்கு எம்.பி., பதவிக்காலம் முடிவதால் அவருக்கு அந்த வாய்ப்பை கொடுப்பதற்கான நோக்கம் எடப்பாடிக்கு இருக்கலாம். அதனால் தேமுதிக முதுகில் குத்துபடப் போவது உறுதி.
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்வதை தடுக்க வேண்டும் என்று திமுக நினைத்தால், அவர்களுக்கு ஒரு சீட் கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம். ஏற்கனவே கமல்ஹாசன் இருக்கிறார். அவருடன் பிரேமலதாவும் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாம். திமுக எவ்வளவு சிறப்பான ஆட்சியை கொடுத்தாலும் அரசுக்கு எதிரான மனநிலை இருக்கும். அதனால் தேமுதிக சேர்ந்தால் அந்த இழப்பை சரிசெய்ய முடியும். தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தால் சில இடங்களில் பலம் தான். தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் தேமுதிகவுக்கு இன்னும் ஓரளவு வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு வாக்கு வங்கி குறைவாக இருக்கலாம். ஆனால் பிரேமலதாவின் பிரச்சாரம் என்பது வலிமையானதாக இருக்கும். அதனால் தான் பிரேமலதா, திமுக குறித்து பெரிய அளவில் வாய் திறக்கவில்லை. முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு அவர் மற்ற எதிர்க்கட்சிகளை போல விமர்சிக்கவில்லை. இதற்கு முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார். அதேவேளையில் எடப்பாடி குறித்தும் பிரேமலதா விமர்சிக்கவில்லை.
மாநிலங்களவை தேர்தலில் கமலுக்கு இடம் கொடுப்பது உறுதியாகும். எம்.பி. வில்சன் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இது தவிர்த்து 2 இடங்கள் தான் உள்ளது. அதை கட்சிக்காரர்களுக்கு தான் கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு தர மாட்டார்கள். பத்திரிகையாளர் என்.ராம் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான சாத்தியம் இல்லை. எம்.எம்.அப்துல்லாவுக்கு பதிலாக வேறு ஒரு சிறுபான்மையினருக்கு வாய்ப்பு தரப்படலாம். தேர்தல் வருடம் என்பதால் கட்சியினரை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும்.
எடப்பாடிக்கு மெகா கூட்டணி கட்டமைக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன. 2வது மாநிலங்களவை இடத்தை தேமுதிக, பாமக கட்சிகளுக்கு வழங்காமல் தங்களுடைய கட்சியினருக்கே கூட அவர் தரலாம். கட்சிக்காரர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், பிரச்சினை இல்லை என்றும் நினைக்கலாம். ஸ்டாலினை பொருத்தவரை ஒரு இடத்தை கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு தர வாய்ப்பு உள்ளது. மற்றொரு இடம் இளைஞரணி தரப்பில் தருவதற்கு வாய்ப்பு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.