மதிமுகவில் வைகோவின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதாகவும், கட்சியினரை திமுகவுக்கு எதிரான மனநிலைக்கு துரை வைகோ மெல்ல மெல்ல மாற்றிவிட்டார் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.

மதிமுகவில் வைகோ – துரை வைகோ ஆகியோர் நிலவும் அதிகாரப் போட்டி குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் வைகோ மிகவும் தீர்மானமாக ஒரு முடிவை எடுத்து, நாங்கள் திராவிட இயக்கத்தை பாதுகாக்க தான் திமுக கூட்டணிக்கு செல்கிறோம் என்று சொன்னார். ஏனென்றால் அவர் அவைத் தலைவர் அர்ஜுனராஜின் பேச்சை, வைகோ கண்டித்துள்ளார். மற்றொரு திமுக கூட்டணிக்கு எதிராக பேசியவர்களை வைகோ கண்டித்துள்ளார். நான் எவ்வளவு சிரமப்பபட்டு இந்த கூட்டணியை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு எதிராக கட்சியினர் பேசுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்போது வைகோவுக்கு இந்த கூட்டணியில் தொடர வேண்டும் என்கிற முடிவு உள்ளது தெரிகிறது. ஆனால் துரை வைகோவிடம் அப்படி பட்ட எண்ணம் உள்ளது போன்று தெரியவில்லை. இந்த கூட்டணியால் தனக்கு என்ன லாபம் என்று அவர் பார்க்கிறார். திமுக கொடுக்கும் 4 எம்எல்ஏக்கள் சீட்டுகள் காரணமாக கட்சி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் நமக்கு என்ன பயன் என்று துரை வைகோ யோசிக்கிறார். நாம் மத்திய அமைச்சராகி விட்டால், கட்சியை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடலாம். இதன் மூலம் மதிமுக தொண்டர்களை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம் என்று அவர் நினைக்கிறார்.
மதிமுகவை பொருத்தவரை வைகோவுக்காக வந்தவர்கள் கட்சியில் உள்ளனர். அவர்களில் பலர் ஓரங்கட்டப்பட்டனர். பலர் ஒதுங்கிக்கொண்டார்கள். எஞ்சியுள்ளவர்கள் கட்சி பதவிகளுக்காக உள்ளனர். அவர்கள் கட்சி யாரிடம் உள்ளதோ, அவர்களுடன் இருந்துவிடுவார்கள். பாமகவை பொறுத்தவரை ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர். ஆனால் நிர்வாகிகள் அனைவரும் அன்புமணியின் பின்னால் போய் நின்றுவிட்டனர். அதுபோன்ற ஒரு சூழலுக்கு வைகோ ஏற்கனவே தள்ளப்பட்டுவிட்டார். வைகோ ஒரு முடிவு எடுத்தால், அதை செயல்படுத்துகிற நிலைமையில் கட்சி கிடையாது. அது முழுக்க முழுக்க துரை வைகோவின் மகன் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்பது கூட்டணி மற்றும் எப்படி யுக்திகளை வகுக்க போகிறார்கள் என்பதுதான். பாஜக – கூட்டணியில் 12 இடங்களை பெற்றுவிட்டால், அதில் 8 இடங்களில் வெல்வோம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தினால், தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கமல்ஹாசனுக்கு, ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. மதிமுக சார்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு மக்களவை தொகுதி, தனி சின்னத்தில் போட்டியிடுவது என்று தான் கூறப்பட்டது. அதன் பிறகு ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? ஆனால் விமர்சனங்கள் முழுவதும் திமுகவை நோக்கி எழுந்தன. கமலஹாசனை தெரிந்தவர்களுக்கு திராவிட இயக்க போர்வாளை தெரியவில்லையா? என்றனர். திமுகவை எப்போது விமர்சிக்கலாம் என்று காத்திருந்தனர். திமுக மீதான ஒரு வெறுப்பு மதிமுகவில் இருக்கும் பெரும்பாலானோர்களுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணி வேண்டாம் என்கிற மனநிலை அவர்களிடம் உள்ளது. அதை மெல்ல மெல்ல துரை வைகோ ஏற்படுத்தி இருக்கிறார் எனப்தை தான், அக்கட்சியின் அவைத்தலைவர் பேசியிருப்பது காட்டுகிறது.
இதற்கு என்ன காரணம்? மதிமுகவுக்கு தனிச் சின்னத்தில் நின்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெறுகிற வாய்ப்பை திமுக கொடுத்திருக்கிறது. 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர், 2021 தேர்தலில் மதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகும் வாய்ப்பை திமுக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. திமுகவின் கோட்டை என கருதப்படும் ஆவடி மாநகராட்சியின் துணை மேயர் பொறுப்பு மதிமுகவுக்கு வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தை ஒட்டி உள்ள நகராட்சி தலைவராக மதிமுகவை சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார். அந்த வாய்ப்பை வழங்கியது திமுக.
இப்படி பெரிய அடையாளத்தை அரசியல் ரீதியாக மதிமுக இழந்திருந்த நேரத்தில், ஒரு அங்கீகரிக்கும் மனநிலையில் திமுக தான் இதை செய்தது. ஏன் திமுக மீது கோபப்படுகிறீர்கள்?. அதிமுக மூழ்க போகிற கப்பல். அவர்களையே அவர்களால் காப்பாற்றிக்கொள்ள முடியாதபோது, உங்களை எப்படி காப்பாற்றுவார்கள்?. இந்த பார்வை உங்களிடம் இருந்திருக்க வேண்டும். நீங்கள் அந்த பார்வைகே வராமல் திமுகவை விமர்சிக்கிறீர்கள் என்றால் யாரே பின்னிருந்து இயக்குகிறார்கள் என்று தான் அர்த்தம். கட்சி தலைமையை யாரே பின் நடத்துகிறார்கள்? என்றுதான் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் பொதுக்குழுவில் நடைபெற்றுள்ளது.
மதிமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையோ, திமுகவை எதிர்த்து நிற்க தீர்மானித்து விட்டார்கள் என்றால்? திமுக அரசியல் ரீதியாக நகர்த்துவது தானே சரியாக இருக்கும். மதிமுகவில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் திமுகவில் சேர தயாராக இருந்தபோதும், 8 ஆண்டுகளாக அவர்களை சேர்க்கவில்லை. முதலமைச்சர் யாரையும் நேரடியாக சேர்க்கவில்லை. முதலமைச்சர் இவ்வளவு நாளாக கண்ணியம் காத்தார். நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக சின்னத்தில் போட்டியிட கோரிக்கை வைத்தபோது செத்தாலும் தனிச் சின்னம்தான் என்று துரை வைகோ வெறுப்பை வெளிப்படுத்தினார். ஆனால் முதலமைச்சர் அதனை பொறுத்துக் கொண்டார்.
வைகோவுக்கு ராஜ்யசபா இடம் தராததால் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து துரை வைகோ ஆவேசமாக பேசினார். ராஜ்யசபா இடம் கேட்கவில்லை என்பதை, வைகோவுக்கு இடம் தருவதாக பேசப்பட்டது. சொல்லப்பட்டது என்று திரித்து கூறினார்கள். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது இதை ஏன் பேசவில்லை? காரணம் உங்களுக்கு திருச்சி தொகுதி கிடைத்தால் போதும், நீங்கள் எம்.பி. ஆனால் போதும் என்று நினைத்தீர்கள். அதனால் நீங்கள் அப்போது வைகோ குறித்து கவலைப்பட வில்லை. தற்போது திடீரென வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறது போன்ற பேச்சுக்கள் முதலமைச்சரை காயப்படுத்தாதா? திமுகவை காயப்படுத்தாதா?
மதிமுகவுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை திமுக தந்திருக்கிறது. இவ்வளவு கொடுத்த பிறகும் தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். நம்மீதான பார்வை அவர்களுக்கு வேறு விதமாக தான் இருக்கிறது என்கிறபோது, நாம் ஏன் வருபவர்களை வேண்டாம் என்று சொல்வது என மதிமுக நிர்வாகியை திமுகவில் இணைத்துள்ளார். முத்துரத்தினம், தொடர்ந்து 25 ஆண்டுகள் உள்ளாட்சி பிரநிதிநிதியாக இருந்தவர். அவரது அப்பா கந்தசாமி ஒருங்கிணைந்த திமுக பொங்கலூர் ஒன்றிய செயலாளர் ஆவார். அது திமுக பாரம்பரியம் கொண்ட கட்சியாகும். அதனால் முத்துரத்தினத்தை சேர்த்துக்கொண்டதில் தவறு கிடையாது. முதலமைச்சர் சரியாக செயல்பட தொடங்கியுள்ளார். முதலமைச்சர் எடுத்திருக்கும் முடிவில் தவறு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.