சிந்திக்கத் தூண்டும் யாரும் சமூகப்பங்களிப்பு செய்கிறார்கள் என்ற வகையில் வேலுபிரபாகரனின் சமூகப்பங்களிப்பை மதிப்பிடலாம். தனக்குச் சரியென்று தோன்றியதைத் தொடர்ந்து பேசிவந்தாா். பெரியாரின் சிந்தனைகளை சினிமா மூலம் வெளிபடுத்திய இயக்குநர் வேலு பிராபகரன் மரணமடைந்தார்.ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். பெரியாரிடமிருந்து பலரும் பல்வேறு கருத்தியல் அம்சங்களை எடுத்துக்கொண்டு வலியுறுத்தக்கூடிய நிலையில் வேலு பிரபாகரன் ‘கடவுள் மறுப்பு’ குறித்து தொடர்ந்து பேசிவந்தார். பெரியரைப் போலவே வேடமிட்டு பெரியாரின் கருத்துகளைக் காணொலிகளில் பேசிவந்தார். சிலர் பெரியாரைப் பாராட்டவும் வசைபாடவும் வேலுபிரபாகரனின் காணொலிகளையே பெரியாரின் காணொலி என்று நம்பி பரப்புவதும் உண்டு.
அவருடைய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ என்ற இரு படங்களும் கலைரீதியாக முழுமையான படங்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒப்பீட்டளவில் ‘கடவுள்’ திரைப்படம் ஓரளவு சுவாரசியமான படம். பொதுவாக ‘இடைநிலைச்சாதி ஆதிக்கத்தை விமர்சிக்காமல் பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே பேசுகிறார்கள்’ என்ற விமர்சனம் பெரியாரிஸ்ட்கள் மீது வைக்கப்படுவதுண்டு. ஆனால் வேலுபிரபாகரனின் ‘கடவுள்’ திரைப்படம் இடைநிலைச்சாதி – தலித் காதலை மையமாக வைத்தே சாதிமறுப்பு, கடவுள் மறுப்பை பேசியது. அவருடைய ‘புரட்சிக்காரன்’ திரைப்படத்தின் நாத்திக நாயகன் அய்யங்கார் கதாபாத்திரம் என்பது ‘நந்தன்’ உள்ளிட்ட பெரியாரிய ஆதரவு பத்திரிகை உள்பட பலரால் அன்று விமர்சிக்கப்பட்டது.

’கடவுள்’ திரைப்படம் ஒரு ஐயப்பன் சீஸனில் வெளியானது. திரையரங்கில் பார்த்தபோது, சில ‘ஐயப்பமார் சாமி’கள் பக்திப்படம் என்று நினைத்துவந்து பதறிப்போயினர். ‘பெரியார்’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க மறுத்தார் என்று நீண்டகாலமாகவே ஒரு வதந்தி(அ) செய்தி உலவுகிறது. ஆனால் முழுக்க கடவுள் மறுப்பை வலியுறுத்திய ‘கடவுள்’ திரைப்படத்திற்கு இசை இளையராஜாதான். ‘புரட்சிக்காரன்’ திரைப்படத்துக்கு வித்யாசாகர். இரண்டு படங்களிலுமே இனிமையான பாடல்கள் உண்டு. வேலு பிரபாகரன் பாலியல் குறித்த தன்னுடைய புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு இரு படங்களை இயக்கினார்.
ஒளிப்பதிவாளராக வெற்றிபெற்ற வேலுபிரபாகரனால் இயக்குனராக வெற்றிபெற முடியவில்லை. ஆனால் அவரது குரல் தனித்துவமானது. தனக்குச் சரியென்று தோன்றியதைத் தொடர்ந்து பேசிவந்தார். கலைரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அவரிடம் கருத்துமாறுபாடுகள் உள்ளன. என்றாலும் சிந்திக்கத் தூண்டும் யாரும் சமூகப்பங்களிப்பு செய்கிறார்கள் என்ற வகையில் வேலுபிரபாகரனின் சமூகப்பங்களிப்பை மதிப்பிடலாம்.