ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் “பதவி பறிப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறும், காங்கிரஸும் அதற்கு ஆதரவு தரும்” எனக் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்லாது, மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் நாடகமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அவர்களின் வழிகாட்டுதலிலும், இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் மக்கள் தலைவருமான ராகுல் காந்தி அவர்களின் தலைமையிலும், எப்போதும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள், ஜனநாயகத்தின் மரியாதை, மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் கட்சியாக இருந்து வருகிறது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக பதவி பறிப்பு, ஜனநாயகத்தை சிதைக்கும் விதமான சட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதைத் தெளிவாக அறிவிக்கிறோம். அமித்ஷா அவர்கள் கூறியிருக்கும் கருத்து, மக்களின் மனதில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட அரசியல் வஞ்சகமே தவிர, உண்மை இல்லை. மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகிய தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல, ஜனநாயக அமைப்பை சிதைக்கும் எந்த முயற்சியும் காங்கிரஸால் ஒருபோதும் ஏற்கப்படாது.
மக்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் எப்போதும் போராடும். தேச விரோத தன்மை கொண்ட, மக்கள் சுதந்திரத்தை பறிக்கும் எந்தச் சட்டத்திற்கும் எங்களால் ஆதரவு அளிக்க முடியாது என்பதை உறுதியாகச் சொல்கிறோம். காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்கள் பக்கம் நின்று, சுதந்திரம், சமத்துவம், நீதி, சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை காக்கும். மக்கள் உரிமைகளை பறிக்க முயலும் பாஜக அரசின் எந்தச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி உறுதியாக எதிர்த்து, தோற்கடிக்கும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளாா்.
முதன்முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்…அனுராக் தாகூர் பேச்சு… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
