மதராஸி படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 5) வெளியான திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க, வில்லனாக வித்யூத் ஜம்வால் நடித்திருக்கிறார். மேலும் பிஜு மேனன், சபீர், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியான இந்த படம் சில ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விறுவிறுப்பான திரைக்கதையை கையில் எடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இவ்வாறு இந்த படத்திற்கு பல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 12.8 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இனிவரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.