லோகா இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லோகா: சாப்டர் 1 சந்திரா. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து நஸ்லேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டோமினிக் அருண் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் சூப்பர்வுமன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.100 கோடியை தட்டி தூக்கியதாக சொல்லப்படுகிறது. இது தவிர நாளுக்கு நாள் இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், வசூலும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அந்த விழாவில் இந்த படத்தை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் அறிவித்திருந்தார். எனவே தற்போது லோகா இரண்டாம் பாகம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது லோகா படக்குழுவினருடன் நடிகர் அருண் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகையினால் லோகா இரண்டாம் பாகத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது. மேலும் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரும் இப்படத்தில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.