சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சவரன் ரூ. 82 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதிலும் அமெரிக்காவின் 50% வரிவிதிப்புக்கு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதஒலீடு அதிகரித்து வருகிறது. இதன் காராணமாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வரும் தங்கம் விலை, சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.50,000க்கு விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி ரூ.60,000 என்கிற அளவில் விற்பனையானது. கடந்த ஆண்டில் மட்டும் சவரனுக்கு ரூ.10 ஆயிரம் வரை ஏற்றம் கண்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் ஜனவரியில் ரூ.60 ஆயிரமாக இருந்த தங்கம், மெல்ல மெல்ல அதிகரித்து ஒரு சவரன் இன்றைய தினம் ரூ.82,000ஐ நெருங்கி வருகிறது. அதாவது 8 மாதங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.23,000 வரை ஏற்றம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, தங்கம் விலை நடப்பாண்டு (2025) மட்டும் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஆபரணத்தங்கம் சவரன் ரூ. 81,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240 என்கிற வரலாறு காணாத மைல்கல்லை தொட்டு விற்பனையாகிறது. இதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.142க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்து வரும் நிலையில், இதே நிலை நீடித்தால் 2026ல் தங்கம் விலை ரூ. 1,25,000ஐ எட்ட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இந்த அதிரடி விலையேற்றம் நடுத்தர வர்க்கத்திபம் மற்றும் இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.