ரோபோ சங்கர் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரோபோ சங்கர். டிவி நிகழ்ச்சிகளில் இவர் அடிக்கும் லூட்டி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு ஏராளமான ரசிகர்களையும் சேகரித்து தந்தது. இது தவிர இவர், மாரி, புலி, சிங்கப்பூர் சலூன் போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவ்வாறு கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரோபோ சங்கர், தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். தொடர் படப்பிடிப்பின் காரணமாக ரோபோ சங்கருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் திடீரென மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.
அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், சில நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட இவர் மெல்ல மெல்ல குணமடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


