விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய நடிப்பில் தற்போது ஓர் மாம்பழ சீசனில், இரண்டு வானம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர், ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். பிரவீன் கே இந்த படத்தை இயக்க ஜிப்ரான் இதற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து செல்வராகவன், வாணி போஜன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும்? என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி தற்போது படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை (அக்டோபர் 19) இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.