குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ரஃபேல் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
இந்திய ஆயுதப் படைகளின் உயர்தளபதியான நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஹரியானா மாநிலம் அம்பாலா-வில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து உலகின் அதிநவீன போர் விமானமான ரஃபேலில் பயணம் செய்தார். இதற்கு முன்பு 2023ம் ஆண்டு ஏப்ரலில் அசாம் மாநிலம் தேஜ்பூரில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து சுகோய்-30 போர் விமானத்தில் முர்மு பயணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். 2020ம் ஆண்டு ஹரியானா மாநிலம் அம்பாலவில் உள்ள நாட்டின் பழமையான விமானப்படை தளமான கோல்டன் ஏரோஸ் விமானப்படைத்தளத்தில் இருந்து ரஃபேல் விமானம் இந்திய பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டது.


இந்திய விமானப்படையில் ரஃபேல் விமானம் சேர்க்கப்பட்டு 5 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ரஃபேல் விமானத்தில் பயணம் செய்தார். இதன்மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்யும் முதல் குடியரசு தலைவர் எனும் பெருமையை முர்மு பெற்றுள்ளார். இதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி 2023ம் ஆண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



