ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு இடையே, மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே நீடித்து வரும் இந்த பனிப்போர், அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். ஆனால் அதனை அசட்டை செய்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். கட்சியில் இருந்து செங்கோட்டையன் ஓரம்கட்டப்படவே, அவரது கருத்துக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஆதரவுக்குரல் கொடுத்தனர்.


இந்த நிலையில் இன்று தேவர் குருபூஜையையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் ஒரே காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். காரில் முனிருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் செங்கோட்டையன் அமர்ந்திருந்தார். முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி அவரது நினைவிடத்தில், ஓபிஎஸ் – செங்கோட்டையன் – டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் பசும்பொன்னில் திறந்தவெளி வாகனத்தில் ஓபிஎஸ்ஸும், செங்கோட்டையனும் ஒன்றாக தேவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.



