கலைஞர் கைது நடவடிக்கையின்போது மு.க.ஸ்டாலின் தப்பியோடவில்லை என்று சம்பத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். வரலாறு தெரியாமல் ஆதவ் அர்ஜுனா கட்சியினரிடம் தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


மூத்த பத்திரிகையாளர் சுரேஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, கலைஞர் கைது செய்யப்பட்டபோது, கைது நடவடிக்கையை கண்டு பயந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடி ஒளிந்துகொண்டதாக கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை பார்க்கிறபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அரசியல் ரீதியாக அவதூறுகளை பரப்புவது வேறு. ஆனால் ஒரு வரலாற்று நிகழ்வு குறித்து தவறான தகவல்களை சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன வரலாறு தெரியும்? நள்ளிரவில் கலைஞர் கைதுக்கு நேரடி சாட்சி என்பது நான் தான். அந்த கைது எப்படி நடைபெற்றது என்பதை புத்தகமாக எழுதியுள்ளேன்.
கலைஞர் கைது தொடர்பாக ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தது நான்தான். அப்படி இருக்கும்போது ஆதவ் அர்ஜுனா வரலாறு என்கிற பெயரில் மிகப்பெரிய பொய்யை சொல்கிறார். ஜுன் 29, 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2 மாதங்களில், கலைஞர் படலம் நடைபெற்றது. திமுக அரசின் 1996 -2001 திமுக ஆட்சியில் சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சிபிசிஐடி காவல்துறையில் புகார் அளித்தார். மதியம் புகார் அளிக்கப்பட்டு, இரவே கைது செய்யப்படுகிறது.

இந்த புகாரில் முதல் குற்றவாளியாக அப்போதைய மேயரான மு.க.ஸ்டாலின் சேர்க்கப்படுகிறார். திட்டத்திற்கு அனுமதி வழங்கியதாக முதலமைச்சர் கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலினை தேடி நள்ளிரவில் கோபாலபுரம் இல்லம் மற்றும் வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கும் போலீசார் சென்றனர். அவர் அப்போது வீட்டில் இல்லை. இதனை அடுத்து, போலீசார் வீட்டின் கதவை உடைத்து படுக்கை அறையில் இருந்த கலைஞரை கைது செய்கிறார்கள். ஜுன் 30ஆம் தேதி அதிகாலை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தான் வெளியூர் சென்று கொண்டிருந்தாகவும், கலைஞர் கைது நடவடிக்கை அறிந்து திரும்பி வந்ததாகவும் கூறினார். தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் நீதிபதி அசோக்குமார் முன்பாக நேரில் சரணடைந்ததார்.
அப்போது தன்னை வெளியூர் சிறைக்கு அழைத்துச் சென்றால் துன்புறுத்த வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று மத்திய சிறையில் அடைத்தார்கள். 3 மணி நேரத்திற்கு பிறகு அவர் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அன்றைக்கு இது தான் நடைபெற்றது. ஸ்டாலின் எங்கேயும் ஓடவும் இல்லை. ஒளியவும் இல்லை. தன்னுடைய கட்சிக்காரர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆதவ் வரலாற்றை மாற்றி மாற்றி பேசுவது சரியானது அல்ல.

கலைஞர் கைதுசெய்யப்பட்ட 3வது நாளில் விடுதலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து மற்றவர்களும் விடுவிக்கப்பட்டனர். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி, கலைஞரை விடுவிக்கக் கோரி அழுத்தம் கொடுத்தார். இதனை தொடர்ந்து, அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சம்பவத்தன்று நான் இரவு பணியில் இருந்தேன். கலாநிதி மாறன் எங்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக கலைஞர் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து நாங்கள் அங்கே சென்றோம். போலீசார் எங்களை தடுத்தார். அப்போது உதவி ஆணையர் சாரங்கன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு 12.45 மணி அளவில் படுக்கை அறையில் இருந்த கலைஞரை கைது செய்தனர். தகவல் கிடைத்ததும் ஸ்டாலின் உடனடியாக அங்கே வந்துவிட்டார். அதற்கு முன்பாக இது தொடர்பாக ஸ்டாலினுக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. அப்படி இருக்கும்போது அவர் எப்படி விசாரணைக்கு ஆஜராவார்? பத்திரிகையாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி ஸ்டாலின் பெங்களூருவுக்கு சென்றுகொண்டிருந்தார். வேலூர் அருகே சென்றபோது அவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் சென்னை திரும்பிவிட்டார்.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வரலாறு தெரியாமல் போகிற போக்கில் பொய்யை சொல்லிவிட்டு செல்வதை என்னால் ஏற்கமுடியவில்லை. உலகமே தூங்கிக் கொண்டிருந்த ஒரு நேரத்தில் காவல்துறையும், பத்திரிகையாளர்களும் எப்படி செயல்பட்டார்கள் என்று அங்கிருந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதில் நானும் ஒரு நபர். ஒரு கள சாட்சி என்பதால் உண்மையை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இதை பதிவு செய்கிறேன். கோபாலபுரம் இல்லத்தின் அருகிலேயே மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் வீடு அமைந்துள்ளது. ஒருவேளை ஸ்டாலின் அங்கே பதுங்கி இருப்பாரோ என்று நினைத்துக் கொண்டு அங்கே போலீசார் சென்றனர். அப்போது திருவல்லிக்கேணி எம்எல்ஏ உசேன், டி.ஆர்.பாலு போன்றவர்களும் அங்கே வந்தனர்.
போலீசார் தள்ளியதில் உசேன் எம்எல்ஏ காயம் அடைந்தார். கலைஞர் கைதான பிறகு அவரை அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தனியாக உட்கார வைத்துவிட்டனர். அப்போது போலீசார் தாக்கியதில் நான் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர்கள் காயம் அடைந்தோம். விஜய் பொதுக்குழுவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று பேசியுள்ளார். அவர் கட்சி தொடங்கி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளாரா? பத்திரிகையாளர்கள் அழைத்தாலே தலை தெறிக்க ஓடுகிறார். தவறான தகவல்களை தான் அவர்கள் சொல்லியுள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


