
தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளது.
தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தாமாவே முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தெருநாய்கள் பிரச்சனை தொடர்பாக டெல்லிக்கு மட்டுமின்றி நாடு முழுவதும் செயல்படுத்த கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி, “தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியக்கூடிய விலங்குகளை உடனடியாக படித்து அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் அதனை உரிய காப்பகத்தில் விட வேண்டும் என்றும், விலங்குகளால் ஏற்படக்கூடிய விபத்து உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக, நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளை குறித்து புகார் அளிப்பதற்காக உரிய அவசரகால எண்ணை ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைத்து மாநிலத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மாநிலங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இந்த உத்தரவின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவுகள் உறுதியாக பின்பற்றப்படுகிறது என்பதை ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசங்களும் விரிவான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பொதுப்பணித் துறை, நகராட்சி அதிகாரிகள், சாலை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து கால்நடைகளை அகற்றி உடனடியாக தங்குமிடங்களில் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற அளவிற்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீண்டும் உறுதிப்படுத்துமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம் என்றும் கூறினர்.
அத்துடன் மாநில அரசுகள் 2 வாரங்களுக்குள் அரசு மற்றும் தனியார் கல்வி, சுகாதார நிறுவனங்களை அடையாளம் கண்டு, தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க வளாகங்களில் வேலிகள் போட்டு பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து நிறுவனங்களின் நிர்வாகம் சம்மந்தப்பட்ட வளாகத்தைப் பராமரிக்க ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், நாய்கள் நுழையாமல் தடுப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளனவா என நகராட்சி அதிகாரிகள் பஞ்சாயத்தில் உள்ள அதிகாரிகள் இந்த வளாகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


