இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் பாராட்டு விழாவின் போது பிகில் படத்தின் புகழ்பெற்ற வசனமான “கப்பு முக்கியம் பிகிலு!” என வசனத்தை பேசி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் அரங்கத்தை அதிரவைத்தார்.
சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள செம்மஞ்சேரி சத்யபாமா பல்கலைக்கழகத்தில் புதிய உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்கலைக்கழகத்தின் உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். அவரை வரவேற்ற பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மலர் மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
விழாவையொட்டி நடந்த நேர்காணலில் ஹர்மன்பிரீத் கவூரிடம் “தமிழ் சினிமாவில் உங்களுக்கு யார் தெரியும்?” என்ற கேள்விக்கு, அவர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” என உற்சாகமாக பதிலளித்தார். உடனே அரங்கம் முழுவதும் மாணவர்கள் விசில், கைத்தட்டலால் அதிர்ந்தது.
அதனை தொடர்ந்து அவர், ”நான் தாய்லாந்தில் இருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து சுமார் நான்கு நிமிடங்கள் பேசினார். உலகக் கோப்பை வென்றதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அது எனக்கு மறக்க முடியாத தருணம்,” என நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
உலகக் கோப்பை இறுதி போட்டி மிகவும் சுவாரஸ்யமாகவும் பதட்டமானதாகவும் இருந்ததாக கூறிய ஹர்மன்பிரீத் கவூர், இந்த வெற்றி என் இதயத்திற்கு நெருக்கமானது. அது என் வாழ்க்கையின் மிக நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பிகில் படத்தின் புகழ்பெற்ற வசனமான “கப்பு முக்கியம் பிகிலு!” என அவர் உரையாற்றியவுடன், மாணவர்கள் கரகோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹர்மன்பிரீத் கவூர், “சத்யபாமா பல்கலைக்கழகம் பல மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கிய தளமாக திகழ்கிறது. இங்கே கல்வி கற்றுக்கொள்ளும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என கூறினார்.


