வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி மற்றும் வாரணாசிக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


டெல்லி, உத்தரபிரதசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டத்துடன் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, நாடு முழுவதும் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடமாநிலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணம் இன்று சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து இன்று காலை 9.50-க்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம், காலை 10.45க்கு டெல்லி புறப்பட வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் காலை 11 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், சென்னையில் இருந்து மாலை 5.20-க்கு, வாரணாசி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 8.55க்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், காலை 9.50க்கு டெல்லியில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.20-க்கு டெல்லியில் இருந்து வரும் ஏர்இந்தியா விமானம், ஆகிய 3 வருகை விமானங்கள் உட்பட 7 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி, அகமதாபாத், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் வெளியூர் செல்ல காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பயணிகள், தங்களுடைய விமானங்கள் காலதாமதம் மற்றும் ரத்து குறித்து, தாங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தெரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற் போல், பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


