புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் லெனின் சிலை வைக்கப்பட்டதற்கு போட்டியாக இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் விநாயகர் சிலை வைத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி இருதரப்பையும் கலைந்து போக செய்தனர்.


புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள லெனின் வீதி – திருவள்ளுவர் சாலை சந்திப்பில் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு முன்பு சிறிய அளவிலான புறம்போக்கு இடம் இருந்தது. அந்த இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 5 அடி உயர லெனின் சிலையை நிறுவினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விதிகளை மீறி வைக்கப்பட்ட லெனின் சிலையை அகற்றக்கோரியும், நேற்று இரவு பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் லெனின் சிலையின் அருகே திடீரென ஒரு விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் குவிந்தனர். இரு தரப்பினரும் எதிர் எதிராக நின்று கோஷம் எழுப்பியதோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இரு தரப்பினரையும் கலைந்து போக சொல்லி போலீசார் அறிவுறுத்தியும், அவர்கள் கலைந்து செல்லாமல் மோதலில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி இரண்டு தரப்பினரையும் கலைத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் லெனின் சிலையை தார்ப்பாய் கொண்டு மூடியதுடன், பாஜகவினர் அங்கு வைத்திருந்த விநாயகர் சிலையை அப்புறப்படுத்தினர்.

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், லெனின் சிலையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சிலையின் மீது மூடப்பட்ட தார்ப்பாயை அகற்றினர். மேலும் பாஜகவினல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சலீம் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


