தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், 2026 – பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 34,087 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 2026-ஆம் ஆண்டு வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் தலைமையில், இன்று (06/01/2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு. இ.ஆ.ப. அவர்கள், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் செயலாளர் லில்லி, இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள், தனி அலுவலர். போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறியிருப்பதாவது, பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 09/01/2026 முதல் 14/01/2026 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன். 10,245 சிறப்புப் பேருந்துகள் என ஆறு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 22,797 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 11,290 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் பயணிளுக்காக 16/01/2026 முதல் 19/01/2026 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 6,820 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 15,188 பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,820 என ஆக மொத்தம் 25,008 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
வழித்தட மாற்றம், கார் மற்றும் இதர வாகனங்கள்
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (OMR) திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக 24×7 கட்டுப்பாட்டு அறை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.
மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரவித்துள்ளாா்.


