வெளிநடப்புக்கு ஆளுநர் கூறிய காரணங்களை சொல்லி எடப்பாடி பழனிசாமியும் வெளியேறியது, அவர் மாநிலத்தின் தன்மானத்தையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் என்பதையே காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.


சட்டமன்ற உரையை புறக்கணித்து ஆளுநர் வெளியேறிய விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் நாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- 2023 முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு துவக்க உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்து வருகிறார். நடப்பு ஆண்டு தேசிய கீதம் பாடவில்லை என்று சொல்லி வெளிநடப்பு செய்த ஆளுநர், அதற்கு காரணங்கள் என்று கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் சொல்லி இருக்கும் காரணங்களை பார்க்கிறபோது அவர் ஆர்.என்.ரவியா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்று கேள்வி எழுகிறது. ஆளுநருக்கு அரசின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதை வெளிப்படுத்துகிற உரிமை கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சொல்கிற ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு தான் ஆளுநர் நடக்க வேண்டும். அவர்கள் தயாரித்த உரையை நீங்கள் படிக்க வேண்டும். ஆளுநர் வெளிநடப்பு செய்ததும், அதே காரணங்களை சொல்லி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வெளிநடப்பு செய்துள்ளார். இது சட்டமன்றத்தின் மாண்பை பாதிக்கிறது என்கிற எண்ணம் அவருக்கு இல்லை. அவர் கட்சியை அடகு வைத்தது போல, மாநிலத்தின் தன்மானத்தையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் அறிக்கையில் பல விஷயங்கள் தவறாக உள்ளது. பல விஷயங்கள் இடம்பெறவில்லை. பல விஷயங்கள் உண்மைக்கு மாறாக உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளார். இப்படி அறிக்கை வெளியிட ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஆளுநர்கள் புதிய புதிய வரம்புமீறல்களில் ஈடுபடுகின்றனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அழுத்தம் இருப்பதாக சொல்லியுள்ளார். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் பொருளாதா கொள்கைளை சார்ந்து தான் அவர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. தமிழ்நாடு அரசு 12 லட்சம் கோடி அந்நிய முதலீடுகளை ஈட்டியுள்ளதாக சொல்வது தவறு என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். குஜராத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வைப்ரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அதேவேளையில் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் அவர் பங்கேற்பது கிடையாது. அப்போது மோடி இந்தியாவின் பிரதமரா? அல்லது குஜராத்தின் முதல்வரா? தமிழ்நாட்டின் ஜிடிபி அதிகரித்துள்ளது. இது ஆளுநருக்கு தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் சொல்லும் நிலையில் 41 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஆளுநர் சொல்கிறார். விலை உயர்ந்த போதைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படும் நிலையில், அதனை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். தமிழ்நாட்டில் கஞ்சாவை தான் கட்டுப்படுத்த முடியும். அப்போது போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? வடஇந்தியாவில் தலித்துகள் மீதான அடக்குமுறைகள் அதிகம். அவை காவல் நிலையங்களில் புகாராக பதிவு செய்யயப்படுவது கிடையாது. நூற்றுக்கு ஒரு சதவீதம் தான் வழக்குப் பதிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் உரிமை குரல் அதிகரித்துள்ளது. அவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுகிறபோது உடனுக்குடன் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. அதன் காரணமாக பட்டியல் இன மக்களுக்கு தைரியம் நிலவுகிறது. அதனால் தான் இவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. தலித் மக்களுக்கு எதிரான பிரச்சினைகள் நாடு முழுவதும் உள்ளது. ஆளுநர் எழுப்பியிருக்கும் சமூக நீதி என்பது முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு சமமானதாகும்.

தேசிய கீதம் பாடவில்லை என்று வெளிநடப்பு செய்தால் மக்களிடம் எடுபடாது என்பதால், ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 12 பாய்ண்ட்டுகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இப்படி திட்டமிட்டு சதி வேலையை செய்திருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல ஆளுநர் உரை என்பது அவசியமற்றது. இதை மாற்ற அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அதை செய்ய பலம் உள்ளதா? என்பது வேறு விஷயம். ஆனால் இதுவே ஆளுநருக்கு போதுமான அடி கொடுத்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்தும் தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளை வைத்துஆட்சி நடத்துவதாக கூறுகிறார். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை செயல்படவிடாமல் தடுப்பவர் ஆளுநர் தான். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காமல், உத்தரபிரதேசத்திற்கும், பீகாருக்கும் கொட்டிக் கொடுகிறது. அதனால் இங்கு நடைபெறும் பிரச்சினைகளுக்கு காரணம் மத்திய அரசு தானே தவிர, திமுக அரசு அல்ல, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
