இந்தியாவில் உயர்கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த கவலையளிக்கும் தரவுகளை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ‘State of Working India 2026’ என்று தனது புதிய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை அனுகூலம் (Demographic Dividend) ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் உயர்கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த கவலையளிக்கும் தரவுகளை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் தனது புதிய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

பட்டதாரிகளே அதிகம் பாதிப்பு என வெளியாகியுள்ள ‘State of Working India 2026’ அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லாமல் இருந்த 20-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 67% பேர் பட்டதாரிகள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 46 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது இது மிகவேகமாக அதிகரித்துள்ளது.
பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, அவர்களுக்கு ஏற்ற தரமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
முக்கியக் கண்டுபிடிப்புகள்:
வேலை தேடும் படலம்: 20-29 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் சுமார் 1.1 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
நிரந்தர வேலை ஒரு கனவு: பட்டப்படிப்பை முடித்த ஒரு ஆண்டுக்குள் நிரந்தர ஊதியம் பெறும் வேலையில் சேருபவர்கள் வெறும் 7 சதவீதம் மட்டுமே. அதிலும் குறிப்பாக ஒயிட்-காலர் (White-collar) எனப்படும் அலுவலகப் பணிகளில் சேருபவர்கள் 3.7 சதவீதம் மட்டுமே.
கல்வி – வேலை இடைவெளி: 2004 முதல் 2023 வரை ஆண்டுக்கு சராசரியாக 50 லட்சம் பட்டதாரிகள் உருவான நிலையில், அவர்களில் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
வயது வாரியான புள்ளிவிவரம்: 15-25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 40 சதவீதமாகவும், 25-29 வயது பிரிவினரிடையே 20 சதவீதமாகவும் உள்ளது.
வீழ்ச்சியடையும் வருமானம் அறிக்கையின்படி, பட்டதாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஊதிய வித்தியாசம் (Wage Premium) குறைந்து வருகிறது. குறிப்பாக 2011-க்குப் பிறகு ஆண்களுக்கான ஊதிய உயர்வு விகிதம் தேக்கமடைந்துள்ளது. இதற்குக் காரணமாக, அதிக அளவிலான பட்டதாரிகள் குறைந்த எண்ணிக்கையிலான வேலைகளுக்குப் போட்டியிடுவதால் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தையே வழங்குவதாகக் கூறப்படுகிறது.
2030-க்குப் பின் சவால்
இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகை விகிதம் 2030-க்குப் பிறகு குறையத் தொடங்கும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது. எனவே, அடுத்த சில ஆண்டுகளில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறினால், இந்தியாவின் இளைஞர் சக்தியைப் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கைநழுவிப் போகும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த ‘SUV கிங்’ – புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!
