Homeசெய்திகள்கட்டுரைதிருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

-

- Advertisement -

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.திருப்பூர் – ஒரு சர்வதேச தொழில் நகரம்

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர் தலைநகர்” (Knitwear Capital) என்ற பெருமையை பெற்றுள்ள இந்த நகரம், ஆயிரக்கணக்கான ஏற்றுமதி நிறுவனங்கள், நூல் மற்றும் துணி உற்பத்தி நிறுவனங்கள், அச்சிடும் மற்றும் வண்ணமிடும் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் முக்கிய தொழில் மையமாக திகழ்கிறது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர், உண்மையில் ஒரு சர்வதேச தொழில் நகரமாகவே வளர்ந்துள்ளது.

we-r-hiring

இந்த நகரத்தின் தொழில்துறை வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்று தொழில்துறை கண்காட்சிகள். ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரில் சுமார் 4 முதல் 5 வரை சர்வதேச அல்லது தெற்காசிய அளவிலான பெரிய தொழில்துறை கண்காட்சிகள் நடைபெறுகின்றன. Knit Tech, Knit Show, Yarntex போன்ற கண்காட்சிகள் இதில் முக்கியமானவை. இந்த கண்காட்சிகள் மூலம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து தொழில்துறை நிபுணர்கள், வாங்குபவர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் திருப்பூருக்கு வருகை தருகின்றனர். இதனால் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன, வணிக வாய்ப்புகள் உருவாகின்றன, மற்றும் திருப்பூர் உலக சந்தையில் மேலும் வலுவான இடத்தை பெறுகிறது.

இதற்குப் பிறகும், ஆண்டுதோறும் பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை சார்ந்த கண்காட்சிகள், தயாரிப்பு அறிமுக நிகழ்ச்சிகள், தொழில் தொடர்பான சந்திப்புகள் போன்றவை வாரந்தோறும் நடைபெற்று வருகின்றன. இதனால் திருப்பூர் தொடர்ந்து தொழில்துறை நிகழ்வுகளின் மையமாகவே செயல்பட்டு வருகிறது.

ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட தொழில் நகரமாக இருந்தும், திருப்பூருக்கென அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு நிரந்தர கண்காட்சி மையம் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது வருத்தகரமான உண்மை. சென்னை நகரில் உள்ள Chennai Trade Centre போல, நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒரு Trade & Exhibition Centre திருப்பூரில் இல்லை.

இதன் காரணமாக, தற்போது நடைபெறும் கண்காட்சிகள் பெரும்பாலும் தற்காலிக திடல்களில் அல்லது திறந்த வெளிகளில் மிகுந்த சிரமங்களுடன் நடத்தப்படுகின்றன. சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், தற்காலிகமாக அமைக்கப்படும் கூடாரங்கள், தற்காலிக மின்சாரம், தண்ணீர் வசதிகள் போன்றவற்றை பயன்படுத்தி கண்காட்சிகள் நடைபெறுகின்றன. பல இடங்களில் அடிப்படை வசதிகளாக இருக்க வேண்டிய போதுமான கழிப்பறை வசதிகள் கூட இல்லாத நிலை உருவாகிறது. இது கண்காட்சிக்கு வருகை தரும் தொழிலதிபர்கள், வெளிநாட்டு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், பல கண்காட்சிகள் நடைபெறும் இடங்கள் நிரந்தரமாக தயார் செய்யப்பட்ட இடங்களாக இல்லாமல், தரிசாக இருக்கும் நிலங்களை உரியவர்களிடம் அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, Toplight Export நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களை சமப்படுத்தி, மிகுந்த முயற்சியுடன் மற்றும் செலவுகளுடன் இந்த கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இது ஏற்பாட்டாளர்களுக்கும் தொழில்துறைக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

திருப்பூர் போன்ற உலகளாவிய தொழில் நகரத்திற்கு, அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு நிரந்தர Trade & Exhibition Centre உருவாக்கப்படுவது காலத்தின் அவசியமாக உள்ளது. பெரிய அளவிலான கண்காட்சி அரங்குகள், போதுமான வாகன நிறுத்தம், நவீன கழிப்பறை வசதிகள், உணவகங்கள், மாநாட்டு அரங்குகள், தங்கும் வசதிகள், மற்றும் சிறந்த போக்குவரத்து இணைப்புகள் ஆகிய அனைத்தும் கொண்ட ஒரு மையம் உருவாக்கப்பட்டால், அது திருப்பூரின் தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்.

எனவே, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைவர் M. K. Stalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, திருப்பூர் தொழில்துறையின் இந்த நீண்டநாள் தேவையை கவனத்தில் கொண்டு, Tirupur Trade Centre அமைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து, வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதை நடைமுறைப்படுத்தி தருமாறு திருப்பூர் தொழில்துறை சார்ந்த அனைவரின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த முயற்சி நிறைவேற்றப்பட்டால், அது திருப்பூரின் தொழில்துறை வளர்ச்சியை மேலும் ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பது உறுதி.

‘திராவிட மாடல் 2.0’-க்கு அடித்தளம் இடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

MUST READ