திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், பெரியார் மற்றும் கலைஞர் வழியில் திமுக செயல்பட்டு வருவதாகவும், அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் தான் இன்றைய ஆட்சி இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நிர்வாகிகளை சந்திப்பது இதுவே முதல் முறை எனக் கூறிய அவர், இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், தேர்தல் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரணி செய்த பணியால் முழுமையான வெற்றி கிடைத்தது போலவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் நூறு விழுக்காடு வெற்றி பெற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதில் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருப்பதாக தெரிவித்த அவர், இந்த சட்டமன்றத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வேண்டும் என்றும் கூறினார். இளைஞரணி, தமிழகத்தை காக்கும் ராணுவ வீரர்களைப் போன்றது எனவும், பாசிச சக்திகள் இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்றும் விமர்சித்தார்.
மேலும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார். மகளிர் விடியல் பயணம், காலை உணவு திட்டம், அன்பு கரங்கள் திட்டம், தமிழ்புதல்வன், இலவச லேப்டாப் வழங்குதல், விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, மகளிருக்கு உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு பயனளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மகளிர் உரிமைத் திட்டத்தை நிறுத்த சிலர் முயற்சித்ததாக குற்றம்சாட்டிய அவர், அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவித்தொகையை அதிகரிக்க உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதிகளை வழங்கவில்லை என்றும், புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளையும் கடுமையாக தாக்கிய அவர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிகள் பல்வேறு அணிகளாக செயல்பட்டாலும், தமிழகத்தில் சேம்பியனாக திமுக தான் உள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி
