தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தொகுதியும், சென்டிமென்ட் ரீதியாக முக்கியமான இடமுமான திருவாரூரில் ஏப்ரல் 2-ம் தேதி தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தை முதல்வர் தொடங்குகிறார். அன்று தொடங்கும் இந்தப் பயணம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக அமையும்.
மாநிலம் தழுவிய பயணம்:
‘தேர்தல் திருவிழா 2026’ என்ற இலக்கோடு மாநிலம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர், திமுக அரசின் சாதனைகளையும் வருங்காலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளார்.

சுமார் மூன்று வாரங்கள் நீடிக்கும் இந்தப் பிரச்சாரப் பயணம், வரும் ஏப்ரல் 21-ம் தேதி முதல்வரின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.
ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 21-ம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது. திமுக தொண்டர்கள் இப்போதே தேர்தல் பணிகளில் உற்சாகமாக இறங்கியுள்ளனர்.
