இந்திய ரயில்வேயில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து செய்தல் ஆகியவற்றின் மூலம் ஈட்டப்பட்ட துல்லியமான வருவாய் விவரங்களை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. இத்தகைய விவரங்கள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்யும்போது கிடைக்கும் வருவாய் குறித்து தனித்தனி கணக்குகள் இல்லை என்று தெரிவித்தார்.
தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் மூலம் கிடைக்கும் கூடுதல் கட்டணங்கள் மற்றும் டிக்கெட் ரத்து கட்டணங்கள் (Cancellation Charges) ஆகியவை ‘இதர வருவாய்’ (Miscellaneous Coaching Receipts) என்ற பொதுவான பிரிவின் கீழேயே கணக்கிடப்படுகின்றன.

ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து விதிகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுவதால், ரத்து செய்யப்படும் தொகையை மட்டும் தனியாகப் பிரித்து கணக்கெடுப்பது நடைமுறையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ரத்து விதிகள் (ஏப்ரல் 2026 முதல்)
இதே வேளையில், ரயில் பயணிகளுக்கான டிக்கெட் ரத்து விதிகளில் அதிரடி மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகளின்படி:
1. ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால், ஒரு பைசா கூட திரும்பக் கிடைக்காது (No Refund). முன்பு இது 4 மணி நேரமாக இருந்தது.
2. ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், டிக்கெட் விலையில் 50% கட்டணம் பிடிக்கப்படும்.
3. 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 25% கட்டணம் பிடிக்கப்படும்.
தட்கல் மற்றும் ரத்து கட்டணங்கள் மூலம் ரயில்வேக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் முன்னதாகப் பெறப்பட்ட சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இந்தத் தரவுகளை வெளியிட மறுப்பது வெளிப்படைத்தன்மையைக் குறைப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அவசரத் தேவைக்காகப் பயன்படுத்தும் தட்கல் திட்டத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதும், ரத்து செய்யும்போது முழுத் தொகையையும் ரயில்வே எடுத்துக் கொள்வதும் “நியாயமற்றது” என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்!
