2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசினார்.
சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. திமுகவில் இணைந்த பிறகு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஓ.பி.எஸ் சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று கனிமொழியைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பின் போது இருவரும் சிறிது நேரம் அரசியல் சூழல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் ஓ.பி.எஸ்-க்கு மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் பரப்புரை குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், மார்ச் 30 முதல் கனிமொழி தனது மாநிலம் தழுவிய பிரசாரத்தைத் தொடங்க உள்ளார். தென் மாவட்டங்களில் கனிமொழிக்கு இருக்கும் செல்வாக்கும், ஓ.பி.எஸ்-க்கு இருக்கும் ஆதரவும் இணைந்து செயல்படுவது திமுகவுக்கு கூடுதல் பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
“தாய் கழகத்திற்கே மீண்டும் வந்துவிட்டேன்” என ஓ.பி.எஸ் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், கனிமொழி உடனான இந்தச் சந்திப்பு தென் தமிழக தேர்தல் வியூகத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
