அமெரிக்கா – ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட, அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டுத் தூதுக்குழுக்கள் சனிக்கிழமையான இன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு வந்தடைந்தன.

நாடாளுமன்ற சபாநாயகர் பாகர் கலிபாப் தலைமையிலான ஈரானிய தூதுக்குழு, அந்நாட்டின் உயர்மட்ட தூதரக அதிகாரி அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட 71 உறுப்பினர்களுடன் அதிகாலையிலேயே பாகிஸ்தான் தலைநகரில் தரையிறங்கியது.
அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மதிய வேளையில் வந்தடைந்தனர். அமெரிக்க தூதுக்குழுவிற்கு அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமை தாங்குகிறார்.
ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவும் தற்காலிக போர்நிறுத்தம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுவே மிகக் கொடிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. இதற்கு உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்துள்ளது. இந்த போர்நிறுத்தம் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் பொருந்துமா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது தாக்குதல்களை “குறைத்துக் கொள்வார்” என்று டொனால்ட் ட்ரம்ப் ஊடக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தனது நட்பு நாடுகளின் மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட்டால் “கடுமையான பதிலடி” கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன் விளைவாக, அக்குறிப்பிட்ட கடல்வழிப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
தங்களுடைய முக்கிய தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ள குவைத், இதற்கு ஈரானும் அதன் ஆதரவு குழுக்களுமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஈரான் இதனை மறுத்துள்ளது.
அதேபோன்று ஹார்முஸ் ஜலசந்தியைத் தவிர்த்துச் செல்லும் மற்றக் குழாய்கள் உள்ளிட்ட முக்கியமான எண்ணெய் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகச் சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. இது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பேச்சுவார்த்தை என்கிற ராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ள போதிலும், தற்போது நிச்சயமற்ற சூழலே நீடிக்கிறது. இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா-ஈரான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், வாஷிங்டனில் லெபனானுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் விருப்பம் தெரிவித்துள்ளது. தலைவர்கள் தற்காலிக நம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், இரு தரப்பினரும் போர்க்களத்தில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்த முனைவது, ஒரு நிலையான உடன்படிக்கையை எட்டுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
