ஒன்றிய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் நாட்டின் அரசியல் வரைபடமே மாறிவிடும் அபாயம் உள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தொகுதி மறுவரையறைக்க வலுக்கும் எதிர்ப்பு
ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இந்த முயற்சிக்கு எதிராக பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இவர்களுடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் அதிலேஷ் யாதவ் மற்றும், உத்தவ் சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் ஆகியோரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
மணிப்பூர் போல் தென்னிந்தியாவில் கலகம் வெடிக்கும்
இந்த விவகாரத்தில் மேலும் கடுமையான எச்சரிக்கையை முன்வைத்த சஞ்சய் ராவத் தொகுதி மறுவரையறை தென்னிந்திய மாநிலங்களில் பெரிய அளவிலான கலகங்களை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தார். “மணிப்பூரில் ஏற்பட்ட நிலைபோன்ற பதற்றம் தென் மாநிலங்களிலும் உருவாகும் அபாயம் உள்ளது” என அவர் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு தென் மாநிலங்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து கருத்து தெரிவித்த ராவத், ”அவருக்கு சுயமரியாதை இருந்தால், மு.க.ஸ்டாலின் போல் தொகுதி மறுவரையறையை எதிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்ற சதி
இதேவேளை, மகளிர் இடஒதுக்கீடு மசோதா போர்வையில் நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்ற பாஜக சதி செய்வதாக சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளாா். தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் அரசியல் சமநிலையே மாற்றமடையும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம், நாட்டின் கூட்டாட்சி அமைப்பு, மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் சமநிலையைச் சுற்றியுள்ள பெரிய விவாதமாக மாறியுள்ளது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாநில தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த பிரச்சினை தேசிய அரசியலில் முக்கிய மையப்புள்ளியாக மாறியுள்ளது.
